சுவாசிக்க தகுதியற்ற அளவுக்கு இருக்கும் காற்று மாசு, கொளுத்தும் கோடை வெப்பம், கடல் மட்டத்தை உயர்த்தும் அளவுக்கு உருகும் பனிமலைகள் போன்ற கால நிலை மாற்றத்திற்கு காரணமாக இருப்பது கார்பன் உமிழ்வு. உலக சூழலுக்கு மிகவும் அச்சுறுத்தலாக இருக்கும் கார்பன் உமிழ்வுக்கு முக்கிய பங்கு வகிப்பது, நாம் பயன்படுத்தும் வாகனங்கள்தான்.

எனவே, கார்பன் உமிழ்வை கட்டுப்படுத்தும் நோக்கில், புதுப்பிக்கத்தக்க எரிசக்திகளை பயன்படுத்தத் தொடங்கியுள்ளது இன்றைய உலகம். இருசக்கர வாகனங்கள் தொடங்கி, ரயில்கள் வரை அனைத்து வாகனங்களும் மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு பசுமை எரிபொருட்களுக்கு மாறிவரும் நிலையில், விமானங்கள் மட்டும் இன்று வரை ஒயிட் பெட்ரோல் மூலம் மட்டுமே இயங்கி வருகின்றன.

இந்த நிலையில்தான், பழைய சமையல் எண்ணெய், காய்கறிக் கழிவுகள், சோளத்தட்டை உள்ளிட்ட பொருட்களை கொண்டு உற்பத்தி செய்யப்பட்ட பசுமை எரிம்பொருள் மூலம் லண்டனை சேர்ந்த விர்ஜின் அட்லாண்டிக் என்ற விமான நிறுவனத்தின், போயிங் (Boeing) 787 ரக பயணிகள் விமானத்தை பறக்க வைத்துள்ளனர் லண்டன் ஆராய்ச்சியாளர்கள்.

5 டன் பசுமை எரிபொருளை நிரப்பிக் கொண்டு லண்டனில் இருந்து புறப்பட்டு, நியூயார்க் நகரத்தில் பத்திரமாக தரையிறங்கி இருக்கிறது Boeing 787 ரக பயணிகள் விமானம். ரோல்ஸ் ராய் நிறுவனம் தயாரித்த டிரெண்ட் 1000 என்ற எஞ்சின் பொருத்தப்பட்ட இந்த விமானம் சோதனை முயற்சியாக இயக்கப்பட்டதால், இதில் பயணிகள் யாரும் செல்லவில்லை. இருப்பினும், பிரிட்டனில் ஆளும் கன்சர்வேடிங் கட்சியின் முக்கிய எம்.பி.க்களில் ஒருவரான ஹென்றி ஸ்மின் பயணித்ததோடு, இந்த தொழில்நுட்பம் விமானப் போக்குவரத்தில் குறிப்பிடத்தக்க சாதனை என்றும் வியந்துள்ளார்.

இத்தகைய எரிபொருளை பயன்படுத்தியதன் மூலம் 70% அளவுக்கு கார்பன் உமிழ்வு குறைந்திருப்பதாக ஆய்வாளர்கள் கூறியுள்ள நிலையில், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கும் இந்த சாதனையை பாராட்டியுள்ளார். ஆராய்ச்சிகளை மேம்படுத்தி, இனி வரும் நாட்களில், இந்த பசுமை எரிபொருள் மூலம் அதிகளவில் விமானங்களை பறக்க வைக்க முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது விர்ஜின் அட்லாண்டிக் நிறுவனம்.