இந்தியா: தமிழ்நாடு

இன்றைய காலக்கட்டத்தில் ஆரோக்கியமான வாழ்விற்கு உடற்பயிற்சி மிகவும் அவசியமானது. நீண்ட நேரம் அமர்ந்தே வேலை செய்வதன் காரணமாக பலர் உடல் பருமன், சர்க்கரை நோய் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால் பாதிக்கப்படுகின்றனர். தினசரி 45 நிமிடம் நடைபயிற்சி மேற்கொள்வதன் மூலம் இதுபோன்ற பிரச்னைகளில் இருந்து தப்பிக்கலாம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். தமிழ்நாட்டில் உடற்பயிற்சி செய்வதற்கென பிரத்யேக இடம் இல்லாததால் பூங்கா, கடற்கரை மற்றும் விளையாட்டு மைதானங்கள் போன்றவற்றை நடைபயிற்சிக்காக பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

ஜப்பானிய மக்கள் நடை பயிற்சி மேற்கொள்வதற்காக அந்நாட்டு அரசு ஹெல்த் வாக் சாலைகள் என்கின்ற பிரத்தியேக சாலைகளை உருவாக்கியுள்ளன. அதனை அடிப்படையாக கொண்ட Walk for health என்ற திட்டத்தை தமிழக அரசும் முன்னெடுத்துள்ளது. இந்த திட்டத்தை இன்று தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னை பெசன்ட் நகரில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் துவங்கி வைத்தார்.

அவருடன் சுகாதார துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ஆகியோரும் பங்கேற்றனர். இந்த நடைபயணமானது அடையாறு எஸ்பி சாலை மேம்பாலம் அருகில் உள்ள டாக்டர் முத்துலட்சுமி பூங்காவிலிருந்து துவங்கியது. சென்னை மட்டுமின்றி தமிழகத்தின் 38 மாவட்டங்களில் பல்வேறு இடஙக்ளில் இந்த ஹெல்த் வாக் திட்டமானது துவங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அமைச்சர்களும், மேயரும் மற்றும் பலர் இதில் குடைபிடித்தபடியே கலந்து கொண்டனர்.