கடந்த 7ஆம் திகதி இஸ்ரேல் மீது ஹாமஸ் படை எதிர்பாராத விதமாகத் தாக்குதலை நடத்தியது. கடந்த பல ஆண்டுகளில் இஸ்ரேல் மீது இந்தளவுக்குப் பெரிய தாக்குதல் நடந்ததே இல்லை. ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், அத்துடன் இஸ்ரேலுக்குள் புகுந்தும் ஹமாஸ் படை தாக்குதல் நடத்தியது.

இதில் இஸ்ரேலை சேர்ந்த பல நூறு பேர் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். அது மட்டுமின்றி இஸ்ரேலுக்குள் நுழைந்த ஹமாஸ் படை, இஸ்ரேல் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த பலரைப் பிணையக் கைதிகளாகவும் பிடித்துச் சென்றது.

முன்னதாக காசா மீதான தாக்குதலை இஸ்ரேல் முழுமையாக நிறுத்தினால் மட்டுமே இந்த பிணையக் கைதிகளை விடுவிக்க முடியும் என்று ஹமாஸ் சார்பில் கூறப்பட்டது. இருப்பினும், காசா மீதான தாக்குதலை இஸ்ரேல் நிறுத்தவில்லை. மாறாக நாளுக்கு நாள் தாக்குதலைத் தொடர்ந்து தீவிரப்படுத்தியே வருகிறது.

முதலில் ஏவுகணை தாக்குதலை மட்டுமே நடத்தி வந்த நிலையில், இப்போது அவர்கள் படையெடுப்பையும் கூட ஆரம்பித்துள்ளனர். இதனால் அங்கே பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே பிணையக் கைதிகளை விடுவிக்க ஹமாஸ் புதிய நிபந்தனை ஒன்றை முன்வைத்துள்ளது. அதாவது இஸ்ரேல் தனது சிறைகளில் உள்ள அனைத்து பாலஸ்தீனியர்களையும் விடுவித்தால் இஸ்ரேல் பிணைக் கைதிகளை விடுவிக்கத் தயாராக இருப்பதாக ஹமாஸ் அறிவித்துள்ளது.

காசா மீதான தரைவழித் தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தி உள்ள நிலையில், ஹமாஸிடம் இருந்து இந்த கோரிக்கை வந்துள்ளது. இது தொடர்பாக ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கூறுகையில், "நாங்கள் பிணையக் கைதிகளை விடுவிக்கத் தாயாராக இருக்கிறோம். ஆனால், அதற்குப் பதிலாக இஸ்ரேல் பாலஸ்தீனர்களை விடுவிக்க வேண்டும். இஸ்ரேலுடன் பிணையக் கைதிகளைப் பரிமாறிக் கொள்ள நாங்கள் தயாராகவே இருக்கிறோம்.

இஸ்ரேல் சிறையில் உள்ள அனைத்து பாலஸ்தீனர்களையும் விடுத்தால் நாங்களும் உடனடியாக அனைத்து பிணைய கைதிகளையும் விடுவிப்போம்" என தெரிவித்துள்ளார்.