இந்தியா: தமிழ்நாடு

சென்னை தேனாம்பேட்டையைச் சேர்ந்த ரவுடியான கருக்கா வினோத், பாட்டிலில் பெட்ரோல் ஊற்றி அதைப் பற்ற வைத்து கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையின் முகப்பு வாயில் முன்பாக வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்து இருந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறுகையில்,

ஆளுநர் மாளிகை மீது தாக்குதல் நடத்தியவரை திமுக வழக்கறிஞர்கள் ஜாமீனில் எடுத்துள்ளனர். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீது மிகப்பெரிய தாக்குதலை நடத்தியுள்ளது. தமிழ்நாட்டின் முதல் குடிமகனான ஆளுநருக்கே பாதுகாப்பு இல்லை. இந்த விவகாரத்தில் சிபிஐ, என்.ஐ.ஏ போன்ற அமைப்புகள் விசாரித்தால் தான் முழு உண்மையை வெளியே கொண்டு வர முடியும். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கே இல்லை. மத்தியில் 9 ஆண்டு காலமாக ஆட்சியில் இருக்கும் எங்களுக்கு எந்த அரசின் மீதும் அரசியலமைப்புச் சட்டம் 356-ஐ பயன்படுத்தி ஆட்சியை கலைக்கும் எண்ணம் இல்லை. ஆளுநர் மாளிகை மீது நடைபெற்ற தாக்குதல் சம்பவத்திற்கு தமிழக முதலமைச்சர் தான் முழு பொறுப்பேற்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், திருநெல்வேலி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரி இல்லை; ஆனாலும் ஆட்சியை கலைக்கும் யோசனை இல்லை என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 'ஆட்சியை கலைக்க யோசித்து தான் பார்க்கட்டுமே, என்ன நடக்கிறது என்று தமிழக மக்களுக்கு நன்றாகவே தெரியும். நடந்த சம்பவம் குறித்து காவல்துறை டிஜிபி விளக்கம் அளித்து இருக்கிறார். விசாரணையும் நடைபெற்று வருகிறது." என பதில் அளித்துள்ளார்.