இந்தியா: தமிழ்நாடு

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை 'என் மண், என் மக்கள்' என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். கடந்த ஜூலை மாதம் 28ஆம் திகதி ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் அண்ணாமலையின் பாதயாத்திரையை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்தார். தொடர்ந்து ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் நடைப்பயணம் கடந்து வந்துள்ளது.

முதல் கட்டமாக 22 நாட்கள் நடைபயணம் மேற்கொண்டார். அதில் 41 சட்டமன்ற தொகுதிகளில் இருக்கும் மக்களை சந்தித்து பேசினார். அடுத்து இரண்டாம் கட்டமாக கடந்த செப்டம்பர் 3ஆம் திகதி தனது நடைபயணத்தை தொடங்கிய அண்ணாமலை அவர்கள் தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் தொடங்கி தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களிலும் செப்டம்பர் 21ம் தேதி திருப்பூர் மாவட்டம் காங்கேயம், தாராபுரம் ஆகிய பகுதிகளில் நடைபயணம் மேற்கொண்டார்.

கோவையில் கடந்த 26ஆம் தேதி வரை நடைபயணம் மேற்கொண்ட அண்ணாமலைக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. 28ஆம் தேதி மேட்டுப்பாளையம் பகுதியில் நடைபெறுவதாக இருந்தது. அந்த பயணத்தை திடீரென அக்டோபர் நான்காம் தேதிக்கு ஒத்தி வைத்தார் அண்ணாமலை. இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்ட அண்ணாமலை , நமது இஸ்லாமிய சகோதர சகோதரிகள் கொண்டாடும் மீலாது நபி பண்டிகை. மேட்டுப்பாளையத்தில் நாளை மீலாது நபி ஊர்வலம் மற்றும் நமது நடைபயணத்தால் ஏற்படும் போக்குவரத்து இடர்பாடுகளை கருத்தில் கொண்டு நமது இஸ்லாமிய சகோதர சகோதரிகளின் கோரிக்கையை ஏற்று மேட்டுப்பாளையத்தில் நாளை நடைபெறவிருந்த நமது என் மண் என் மக்கள் நடைபயணம் அக்டோபர் 4ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுகிறது என்று அறிவித்தார்.

இந்த நிலையில் பாஜக தலைமையிடம் வந்த அவசர அழைப்பை ஏற்று டெல்லி சென்று இரண்டு நாட்கள் தலைவர்களை சந்தித்து பேசி விட்டு சென்னை திரும்பினார் அண்ணாமலை. இந்நிலையில் இன்று அண்ணாமலை தலைமையில் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே அண்ணாமலை மேற்கொள்ள இருந்த நடைபயணம் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அண்ணாமலைக்கு காய்ச்சல், தொண்டை வலி உள்ளிட்ட பாதிப்புகள் இருப்பதாகவும் மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதன் பேரில் அண்ணாமலையின் நடைபயணம் அக்டோபர் 16ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இன்று அண்ணாமலை தலைமையில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.