திரைப்பட இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் கடந்த மாதம் 10ம் திகதி சென்னையில் ‛‛மறக்குமா நெஞ்சம்'' என்ற கச்சேரி ஒன்றை நடத்தினார். அதிக டிக்கெட் விற்பனையால் டிக்கெட் வாங்கியும் பலர் நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாதநிலை ஏற்படுத்தியது. மேலும் பலரும் நிகழ்ச்சியை பார்க்காமல் வீடு திரும்பினர்.

இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதோடு, முதல்வர் ஸ்டாலினின் காரும் சிக்கிக்கொண்டது. இதையடுத்து நிகழ்ச்சியில் பங்கேற்காதவர்களுக்கு டிக்கெட் கட்டணம் திருப்பி வழங்கப்பட்டு வருகிறது. இந்த பிரச்சனை முடிவுக்கு வந்த நிலையில் ஏஆர் ரஹ்மான் மீது அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தின் சார்பில் சென்னை காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது.

கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் 26ம் திகதி முதல் 30ம் திகதி வரை அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கான மாநாடு நடத்த திட்டமிடப்பட்டது. இதில் ஏஆர் ரஹ்மான் இசை நிகழ்ச்சிக்காக முன்பணமாக ரூ. 29.50 லட்சம் வழங்கப்பட்டது. ஆனால் மாநாடுக்கு அனுமதி இல்லாததால் இசை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. ஆனால் முன்பணத்தை ஏஆர் ரஹ்மான் தரவில்லை. அவர் மீது சட்ட நடவடிக்கை எடுத்து பணத்தை திரும்ப பெற்று கொடுக்க வேண்டும் என கூறப்பட்டு இருந்தது.

இந்த புகாரை ஏஆர் ரஹ்மான் தரப்பு மறுத்தது. இதற்கிடையே அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தின் சார்பில் பணம் கேட்டு நோட்டீசும் வழங்கப்பட்டது. இதையடுத்து நேற்று ஏஆர் ரஹ்மான் சார்பில் அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்திற்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. அதில், ‛‛உங்களின் பணத்தை நான் பெறவில்லை. எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் அவதூறு செய்கிறீர்கள். 3வது நபரிடம் பணத்தை கொடுத்ததோடு, எனது பெயரை தேவையின்றி பயன்படுத்தி உள்ளீர்கள். இதனால் 15 நாட்களில் மன்னிப்பு கேட்க வேண்டும். அதோடு ரூ.10 கோடி மானநஷ்ட ஈடு வழங்க வேண்டும்'' என கூறப்பட்டு இருந்தது.

இந்நிலையில் தான் இசையமைப்பாளர் ஏஆர் ர​ஹ்மானுக்கு, அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கம் சார்பில் பதில் நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த நோட்டீசில் கூறப்பட்டுள்ளதாவது:

உங்களின் உதவியாளர் உங்களின் அனுமதியின்றி எந்த நிகழ்ச்சியையும் ஏற்பாடு செய்ய மாட்டார். உங்கள் நிகழ்ச்சி தொடர்பான விபரத்தில் ரத்து தொடர்பாக எந்த அறிவிப்பும் இடம்பெறவில்லை. மேலும் நிகழ்ச்சி ரத்தானது மற்றும் நீங்கள் அளித்த நோட்டீஸ் உள்ளிட்டவற்றால் நாங்கள் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறோம்.

இதனால் ஏஆர்ரஹ்மான் உடனே நிபந்தனையற்ற பொது மன்னிப்பு கேட்க ​வேண்டும். நோட்டீஸ் கிடைத்த 15 நாட்களுக்குள் டாக்டர்கள் மற்றும் அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்துக்கு ரூ.15 கோடி நஷ்டஈடு வழங்க வேண்டும். மேலும் வட்டியுடன் முன்பணத்தை வழங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.