இந்தியா: தமிழ்நாடு

தமிழ்நாட்டில் அதிமுக-பாஜக இடையேயான கூட்டணி முறிந்துள்ளது. இந்நிலையில் தான் கூட்டணியில் இருந்து விலகிய அதிமுகவை மீண்டும் சேர்க்க பாஜக முயன்று வருவதாக கூறப்படுகிறது.

இத்தகைய சூழலில் தமிழகத்தில் அதிமுக உடனான கூட்டணி முறிவுக்கு மாநில பாஜக தலைவர் அண்ணாமலையின் செயல்பாடு தான் காரணம் என கூறப்படுகிறது. இதனால் அண்ணாமலை அவசரமாக டெல்லி சென்றார். பாஜக மேலிடம் அழைத்ததன் பேரில் அவர் டெல்லி புறப்பட்டு சென்றார். டெல்லியில் அண்ணாமலை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா உள்ளிட்டோரை சந்தித்து பேசினார்.

இந்த வேளையில் தமிழக அரசியல் நிலவரம், அதிமுக-பாஜக கூட்டணி முறிவு குறித்த விபரங்கள் பற்றி அவர்கள் விவாதித்தனர். மேலும் மேலிட தலைவர்களின் கேள்விகளுக்கு அண்ணாமலை பதிலளித்தார். அதோடு எதிர்கால திட்டங்கள் பற்றியும் அவர் விவரித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தான் அதிமுகவுடனான கூட்டணி முறிவு குறித்து டெல்லியில் பாஜகவின் தேசிய தலைவர்களிடம் விளக்கம் அளித்த பிறகு நேற்றையதினம் இரவு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சென்னை திரும்பினார்.

சென்னை திரும்பிய அண்ணாமலைக்கு நிர்வாகிகள் சிலர் ஒற்றை பூவை கொடுத்து வரவேற்றனர். சிலர் அவருக்கு பூ கொடுத்து வரவேற்று செல்பி எடுத்தனர். மேலும் அண்ணாமலை வருகையை முன்கூட்டியே அறிந்திருந்த பத்திரிகையாளர்கள் மைக்கை தயாராக வைத்திருந்தனர்.

பாஜக மேலிட தலைவர்கள் உடனான சந்திப்பு குறித்து கேட்க பத்திரிகையாளர்கள் தயாராக இருந்தனர். இந்த வேளையில் சென்னை வந்திறங்கிய அண்ணாமலை பத்திரிகையாளர்கள் சந்திக்காமல் மைக் வைத்திருந்த பகுதியை அடைந்தபோது கையெடுத்து கும்பிட்டுவிட்டு கடந்து சென்றார். பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தவில்லை. இதுதொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி பரவி வருகிறது.