இந்தியா-கனடா இடையே தற்போது கருத்து மோதல்கள் ஏற்பட்டுள்ளது. அதாவது கனடாவில் வசித்து வந்த கேடிஎப் எனும் காலிஸ்தான் புலிப்படை தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் ஜூன் மாதம் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். இவர் கனடாவில் இருந்து கொண்டு இந்தியாவுக்கு எதிராக சதித்திட்டங்களை தீட்டி குழப்பத்தை ஏற்படுத்தி வந்தார். இவர் மீது இந்தியாவில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த கொலை வழக்கில் இன்னும் கனடா தரப்பு துப்பு துலக்கவில்லை. ஹர்தீப் சிங் நிஜ்ஜாரை யார் கொலை செய்தார்கள் என்பதை கண்டுபிடிக்க முடியாமல் கனடா திணறி வருகிறது.

இத்தகைய சூழலில் தான் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்தியா மீது பகிரங்கமாக குற்றம்சாட்டினார். ஹர்தீப் சிங் நிஜ்ஜாரின் கொலைக்கும், இந்தியாவுக்கும் தொடர்பு உள்ளது. இந்தியாவின் ஏஜென்சி மூலம் அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் வெளிவந்து இருப்பதாக கூறினார். இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. கனடா ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறது. இது சரியான நடவடிக்கை இல்லை. ஆதாரங்களை கொடுத்தால் ஆய்வு செய்ய இந்தியா தயாராக இருக்கிறது என கூறியது.

ஆனாலும் ஜஸ்டின் ட்ரூடோ அவ்வப்போது இந்தியாவை சீண்டும் வகையில் குற்றம்சுமர்த்தி வருகிறார். மேலும் கனடாவில் உள்ள இந்திய தூதரை வெளியேற ஜஸ்டின் ட்ரூடோ உத்தரவிட்டார். இதற்கு எதிர்வினையாக இந்திய அரசு, இந்தியாவில் உள்ள கனடா நாட்டு தூதரக அதிகாரியை வெளியேற உத்தரவிட்டது. இதன் தொடர்ச்சியாக இந்தியா இன்று அதிரடி நடவடிக்கையை கையில் எடுத்தது. அதன்படி அக்டோபர் மாதம் 10ம் தேதிக்குள் இந்தியாவில் இருக்கும் கனடா தூதர்கள், அதிகாரிகள் என 40 பேரை திரும்ப அழைத்து கொள்ள வேண்டும். இந்தியாவில் மொத்தம் 62 கனடா அதிகாரிகள் உள்ள நிலையில் அவர்களின் எண்ணிக்கையை 41 ஆக வரும்காலத்தில் குறைக்க வேண்டும் என அதிரடியாக கூறியுள்ளது.

இந்தியாவின் இந்த அறிவிப்பை சற்றும் எதிர்பார்க்காத ஜஸ்டின் ட்ரூடோ பெரும் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளார். இதன் தொடர்ச்சியாக தான் ஜஸ்டின் ட்ரூடோ இந்தியா உடனான மோதலில் பின்வாங்க தொடங்கி உள்ளார். அதாவது இந்தியா பிறப்பித்த உத்தரவுக்கு பிறகு இந்தியா -கனடா உறவு குறித்து முக்கிய தகவலை ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:

இந்தியா உடனான மோதலை அதிகரிக்க விரும்பவில்லை. இருநாடுகளுடனான பதற்றத்தை அதிகரிக்க கனடா விரும்பவில்லை. இந்தியாவுடன் பொறுப்புடனும், ஆக்கப்பூர்வமாகவும் செயல்பட விரும்புகிறேன். கனடா மக்களுக்கு உதவும் வகையில் பொறுப்புடன் செயல்படுவதில் உறுதியாக இருக்கிறேன். அதோடு கனடா மக்களுக்கு உதவ வேண்டும் என்றால் எங்களின் தூதர்கள் இந்தியாவில் இருக்க வேண்டும் என்பதை விரும்புகிறேன் என இறங்கி வந்துள்ளார்.