இந்தியா: தமிழ்நாடு

முத்துராமலிங்கத் தேவருக்கு பயந்து ஓடியவர் அண்ணா என்கிற வகையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசியதற்கு அதிமுக, திமுக தரப்பில் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தனக்கே உரிய பாணியில் அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

இந்நிலையில், அண்ணாவை பற்றி அவதூறாக பேசினால் பேசுபவர்களின் நாக்கு அழுகிவிடும் எனவும், எப்பேர்பட்ட அரசியல் கட்சிக்கு தலைவராக இருந்தாலும் சரி, மறைந்த தலைவர்களை கொச்சைப்படுத்தும் வகையில் பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அண்ணாமலைக்கு சூசகமாக பதிலடி கொடுத்துள்ளார்.

அமித்ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசிய தருணத்தில் அண்ணாமலையின் அண்ணா குறித்த கருத்து அதிமுக -பாஜக கூட்டணியில் பெரிய விரிசலை ஏற்படுத்தியிருக்கின்றன. இரண்டு கட்சிகளின் தலைமையும் கூட்டணி தொடர்வதாக அறிவித்தாலும் தொண்டர்கள், நிர்வாகிகள் மனமுவந்து தேர்தல் பணியாற்றுவார்களா என்பது சந்தேகமே.

அண்ணாவின் பெயரை தாங்கியுள்ள கட்சியுடன் கூட்டணி வைத்துக்கொண்டே அண்ணாவை பற்றி அண்ணாமலை விமர்சித்து பேசியிருப்பது, இவருக்கு அதிமுகவுடனான கூட்டணியில் விருப்பமில்லையோ என்ற விவாதத்தை எழுப்பியுள்ளது.