அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள ஹோல்ம்ஸ் நகர பொலிஸாருக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை மதியம் 3.30 மணியளவில் ஒரு அழைப்பு வந்தது.

அதில் பேசிய பெண், தனது 2 வயது பெண் குழந்தை பேச்சு மூச்சு இல்லாமல் இருப்பதாக தெரிவித்தார். இதையடுத்து பொலிஸார் மருத்துவருடன் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

அதே சமயத்தில், அந்தக் குழந்தையின் உடல் 107 டிகிரியில் கொதிப்பதாகவும் மருத்துவர் தெரிவித்தார்.

பொதுவாக, ஒருவர் இறந்துவிட்டால் அவரது உடல் குளிர்ந்துவிடும்‌ எனவே இது பொலிஸாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து, அக்குழந்தையின் பெற்றோர்களான மெக்கெலன் (32), கேத்ரீன் (23) ஆகியோரிடம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் நெஞ்சை பதற வைக்கும் உண்மை வெளியானது.

குழந்தை இறப்பதற்கு முந்தைய தினம் இரவு கணவனும், மனைவியும் தங்கள் 4 வயது மற்றும் இரண்டு வயது பெண் குழந்தைகளுடன் காரில் வெளியே சென்றுள்ளனர்.

இரவு உணவை ஓட்டலில் சாப்பிட்ட அவர்கள், பின்னர் ஓரிடத்தில் மெத்தமேட்டமைன் என்ற போதைப்பொருளை உட்கொண்டுள்ளனர்

அதன் பிறகு சிறிது நேரம் கழித்து காரில் சுற்றிய அவர்கள், நள்ளிரவு 2 மணிக்கு வீடு திரும்பியுள்ளனர். அப்போது அவர்களின் 2 வயது பெண் குழந்தை பின் சீட்டில் தூங்கிக் கொண்டிருந்தது. போதையில் இருந்த அவர்கள் பிறகு குழந்தையை தூக்கிச் செல்லலாம் என ஒரு குழந்தையை மட்டும் வீட்டுக்கு கொண்டு சென்றுள்ளனர்.

பின்னர் அவர்கள் போதையிலேயே தூங்கிவிட்டனர்.

இதையடுத்து, மறு நாள் மதியம் 3 மணிக்குதான் 2 ஆவது குழந்தை காரில் இருந்தது அவர்களுக்கு நினைவுக்கு வந்தது. பின்னர் உடனடியாக சென்று காரில் இருந்த குழந்தையை தூக்கிய போது, அந்தக் குழந்தை பேச்சு மூச்சு இல்லாமல் இருந்துள்ளது.

மூடப்பட்ட காரில் இருந்ததால் காரின் வெப்பநிலை அதிகரித்து அந்தக் குழந்தை சுமார் 115 டிகிரி வெப்பநிலையில் துடிதுடித்து பரிதாபமாக இறந்துள்ளது.

இந்நிலையில், குழந்தையை அலட்சியமாக கையாண்டது, குழந்தையின் மரணத்துக்கு காரணமாக இருந்தது, போதைப்பொருட்களை உட்கொண்டது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் மெக்கெலன், கேத்ரீன் மீது பதிவு செய்த பொலிஸார் அவர்களை கைது செய்தனர்.