இந்தியா: தமிழ்நாடு

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, தொடர் மின்வெட்டு, விஷச்சாராய மரணங்கள், அதிகரித்து வரும் போதைப் பொருட்களின் புழக்கம், ரூ.30 ஆயிரம் கோடிக்கு விசாரணை, பழனிவேல் தியாகராஜன் பேசியதாக கூறப்படும் ஆடியோ விவகாரம் உள்ளிட்ட ஆட்சியின் பல்வேறு முறைகேடுகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டி கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்து மனு கொடுக்கப் போவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருந்தார்.

இதற்காக அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கும் அழைப்பு விடுத்திருந்தார்.

அதன்படி இன்று காலையில் சைதாப்பேட்டை சின்னமலை அருகே பல்லாயிரக்கணக்கில் அ.தி.மு.க.வினர் திரண்டனர். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து ஏராளமான தொண்டர்கள் தி.மு.க. ஆட்சிக்கு எதிரான பதாகைகளுடன் கலந்து கொண்டனர்.

எடப்பாடி பழனிசாமி வந்ததும் அவர் தலைமையில் கவர்னர் மாளிகை நோக்கி கண்டன பேரணி தொடங்கி நடைபெற்று வருகிது.

இந்த பேரணி கவர்னர் மாளிகையை சென்றடைந்ததும் எடப்பாடி பழனிசாமி முக்கிய நிர்வாகிகளுடன் சென்று கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்து மனு கொடுக்க உள்ளார். அதன்பிறகு எடப்பாடி பழனிசாமி பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டி கொடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.

கவர்னர் மாளிகை நோக்கி இன்று அ.தி.மு.க. பிரம்மாண்ட பேரணி நடத்த இருப்பதையொட்டி சென்னை மற்றும் புறநகரில் இருந்து ஏராளமான கட்சி நிர்வாகிகள் அதில் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.