சார்லட் தமிழ்ச் சங்கத்தின் சித்திரைத் திருவிழா மே 14, 2023 ஞாயிற்றுக்கிழமை, அன்னையர் நாளன்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இந்தச் சித்திரைத் திருவிழாவில் பாரம்பரிய நிகழ்ச்சிகளான பரதம், ஒயிலாட்டம்,சிலம்பம் போன்றவை இடம்பெற்றன. சார்லட் தமிழ்ச் சங்கத்தின் "வானம்பாடி" இசைக் குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சியும் இந்த விழா மேடையில் அரங்கேறியது கூடுதல் சிறப்பாக அமைந்தது.

விழாவில் 1200 சார்லட் தமிழ்ச் சங்க உறுப்பினர்களுக்கு 20 வகையான உணவு வகைகள் கொண்ட சுவையான வாழையிலை விருந்து பரிமாறப்பட்டது. 150 தன்னார்வலர்கள் இணைந்து பணியாற்றி    உணவினை தயாரித்து, வந்திருந்த விருந்தினர்களை அருமையாக உபசரித்தனர்.

அறுசுவை உணவிற்கு பின் செவிக்கு உணவளிக்கும் விதமாக பட்டிமன்ற நிகழ்ச்சி அரங்கேறியது. 'சன் டிவி புகழ்' திரு ராஜா தலைமையில், திருமதி பாரதி பாஸ்கர் மற்றும் சார்லட் தமிழ்ச் சங்க உறுப்பினர்கள் மற்றும் இளையோர் பங்கேற்ற பட்டிமன்றம் பலரின் 
பாராட்டை பெற்றது. அறுசுவை உணவோடு நகைச்சுவையும், தமிழின் பொருட்சுவையும் இணைந்து எண்சுவையாய்த் 
தித்தித்தது.

சிறுவர்களுக்கான ஓவியப் போட்டி மற்றும் பெரியோர்களுக்கான காய்கறி மற்றும் பழங்கள் செதுக்கும் போட்டி ஆகியன நடைப்பெற்றது. இந்தப் போட்டியில் வென்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது.

கலைநிகழ்ச்சிகளுக்கான முன் பதிவு, பங்கேற்பாளர்களுக்கு உரிய தகவல் அளிப்பது என இந்த நிகழ்ச்சியில் இளையோர்களும் பெருமளவில் தன்னார்வப் பணியாற்றியது சிறப்பாக இருந்தது.

தமிழால் இணைந்த சார்லட் தமிழ்ச் சொந்தங்கள் அனைவரின் நெஞ்சிலும் இந்த நிகழ்வு மகிழ்வானதொரு தருணமாக நிறைந்திருக்கும் என்றால் அது மிகையில்லை.
செய்திக் குறிப்பு-
ஆனந்த் திருநாராயணன்
துணைத்தலைவர், சார்லட் தமிழ்ச் சங்கம்

-நமது செய்தியாளர்
ஷீலா ரமணன்