இந்தியா: தமிழ்நாடு

2000 ரூபாய் நோட்டுக்களை திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

கருப்புப் பணப் புழக்கத்தை மேலும் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இது தொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில் 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெற ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. எனவே, ரூ.2,000 நோட்டுகளை வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு இனி விநியோகிக்கக் கூடாது. இந்த நடைமுறை உடனடியாக அமலுக்கு வருகிறது. பொதுமக்கள் தங்களிடம் இருக்கும் 2,000 ரூபாய் நோட்டுகளை இம்மாதம் 23-ம் திகதி முதல் வங்கிகளில் கொடுத்து கணக்கில் வரவு வைத்துக்கொள்ளலாம் அல்லது வேறு ரூபாய் நோட்டுகளாக மாற்றிக் கொள்ளலாம். ஒரு நேரத்தில் அதிகபட்சம் 20,000 ரூபாய் வரை வங்கிகளில் இவ்வாறு வரவு வைக்க முடியும் அல்லது மாற்ற முடியும். இதில் கட்டுப்பாடுகள் கிடையாது என்று அறிவித்துள்ளது.

இந்தியாவின் மொத்த பண சுழற்சியில் 500, 1,000 ரூபாய் நோட்டுகளே 68 சதவீதம் உள்ளன. அதன் மதிப்பு 14 லட்சம் கோடி ரூபாய். இவற்றைப் புதிய 500, 1000 ரூபாய் தாள்களாக மாற்ற வேண்டும் என்றால், அச்சிடுவதற்கே மாதக்கணக்கில் ஆகும். அதுவே 500, 2,000 ரூபாய் நோட்டுகளாக அச்சிட்டால், 50 நாட்களுக்குள் அச்சிட்டுவிடலாம் என்ற அடிப்படையில் 2000 ஆயிரம் ரூபாய் நோட்டு கொண்டு வரப்பட்டது.

புதிதாக கொண்டு வரப்பட்ட 2,000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து தொடர்ந்து குறைந்துகொண்டே வந்தது. ஏடிஎம்களில் 2,000 ரூபாய் நோட்டுகள் கிடைக்கவில்லை. தட்டுப்பாடு காரணமாக அவற்றை வங்கிகளில் விநியோகிப்பதைக் குறைத்துக்கொள்ள முயற்சி செய்வதே காரணம் என்று கூறப்பட்டது. புழக்கத்தில் குறைவாக இருந்தாலும் ரூ.2000 ஆயிரம் நோட்டு மீண்டும் அச்சிடப்படாது என மத்திய அரசு ஏற்கெனவே தெரிவித்திருந்தது.

இதனால், சந்தையில் அவற்றின் புழக்கம் பெருமளவில் குறைந்துவிட்டது. கடந்த 2018-ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி 2,000 ரூபாய் நோட்டுகளின் புழக்கம் 6.73 லட்சம் கோடியாக இருந்தது. இது 2023, மார்ச் 31ம் தேதி 3.62 லட்சம் கோடியாக குறைந்துள்ளது. புழக்கத்தில் உள்ள 2,000 ரூபாய் நோட்டுகளின் மதிப்பில் இது 10.80 சதவீதமாகும். இந்தத் தொகையில் பெரும்பகுதி கருப்புப் பணமாக இருக்க வாய்ப்புள்ளதாலேயே அவை வங்கிக்கு வரவில்லை என கருதப்படுகிறது. எனவே, அவற்றை வங்கிக்குக் கொண்டு வருவதற்கான நடவடிக்கையாக இந்த நடவடிக்கை பார்க்கப்படுகிறது.