லியோவைத் தொடர்ந்து விஜய்யின் தளபதி 68 படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் தளபதி 68 படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்கவுள்ளதாக சொல்லப்பட்ட நிலையில் தற்போது ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பதும் கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

இதனிடையே விஜய் - வெங்கட் பிரபு இணையும் தளபதி 68 படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைப்பார் என சொல்லப்பட்டது.

வெங்கட்பிரபுவின் படங்கள் அனைத்துக்கும் யுவன் தான் என்பது குறிப்பிடத்தக்கது. கோலிவுட்டின் மிக முக்கியமான கூட்டணியான வெங்கட் பிரபு - யுவன் மேஜிக், விஜய்யின் தளபதி 68 படத்திலும் தொடரும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர்.

இந்நிலையில், தளபதி 68 படத்திற்கு யுவன் இசையமைக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்தப் படத்தை தயாரிக்கவுள்ள ஏஜிஎஸ் நிறுவனம் யுவனுக்குப் பதிலாக அனிருத்தை தெரிவு செய்யலாம் என வெங்கட் பிரபுவிடம் சொல்லிவிட்டதாம்.

வெங்கட் பிரபுவும் வேறு வழியில்லாமல் தயாரிப்பு நிறுவனத்துக்கு சம்மதம் கூறிவிட்டதாக தெரிகிறது. இதனால் விஜய் - யுவன் கூட்டணியை எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு இது பெரிய ஏமாற்றமாக அமைந்துள்ளது.

அதேநேரம் தளபதி 68 படத்துக்கு அனிருத் இசையமைப்பது குறித்தும் இதுவரை உறுதிப்படுத்தப்பட்ட தகவல் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.