இந்தியா: தமிழ்நாடு

1984 ஆம் ஆண்டு எடப்பாடி தொகுதியில் ஜனதா தளம் கட்சிக்கு வேலை பார்த்தவர் எடப்பாடி பழனிசாமி எனவும் திராவிட வரலாறு, அதிமுக வரலாறு பற்றி எடப்பாடி பழனிசாமிக்கு தெரியாது என்றும் முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஓ பன்னீர் செல்வம் ஆதரவாளரும் எம்.எல்.ஏவுமான வைத்திலிங்கம் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது...

எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச்செயலாளர் என தேர்வு செய்யப்பட்டது சரி எனக்கூறி தேர்தல் ஆணையம் இணையதளத்தில் வெளியிட்டு இருப்பது நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு உட்பட்டது.

தேர்தல் ஆணையத்தின் வழக்கமான நடைமுறை இதுவாகும். நீதிமன்ற தீர்ப்புக்கு பின்னரே அடுத்த கட்ட செயல்பாடு குறித்து முடிவு எடுக்கப்படும். சட்ட ரீதியாக நாங்கள் பலமாகவே இருக்கிறோம். 100 % எங்களுக்கு வாய்ப்பு உள்ளது.

நீதிமன்ற தீர்ப்பு வரும் ஜூன் மாதம் வரும். அந்த தீர்ப்பின் நிலைமைக்கு ஏற்ப எங்களது முடிவு அமையும்.எடப்பாடி பழனிசாமியை தவிர்த்து அதிமுகவை ஒருங்கிணைப்போம்.

1984 ஆம் ஆண்டு எடப்பாடி தொகுதியில் ஜனதா தளம் கட்சிக்கு வேலை பார்த்தவர் எடப்பாடி பழனிசாமி. திராவிட வரலாறு, அதிமுக வரலாறு பற்றி தெரியாதவர் எடப்பாடி பழனிசாமி. அவருக்கு தேவை என்றால் சபரீசனுடன் ரகசியமாக போனில் தொடர்பு கொண்டு பேசுவார்.

அவருடைய மனசாட்சிக்கு இதுபற்றி தெரியும். ஊழலைப் பற்றி பேச ஜெயக்குமாருக்கு எந்த தகுதியும் இல்லை. ஜெயக்குமார் ஒரு எடுப்பார் கைப்பிள்ளை.

அவருக்கு அரசியலில் எதிர்காலம் கிடையாது. ஜெயக்குமார் எந்த தொகுதியிலும் எம்.எல்.ஏவாக முடியாது. மாநிலங்களவை சீட்டு தனக்கு கிடைக்காதா என்ற ஏக்கத்தில் கிளிப்பிள்ளை போல பேசி வருகிறார்.

ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன் ஆகியோர் இணைந்து செயல்படுவதை எடப்பாடி பழனிசாமி அணியில் உள்ள 95 சதவீதம் பேர் வரவேற்கிறார்கள். எடப்பாடி பழனிசாமி அணியில் உள்ள மாவட்ட செயலாளர்கள் பலர் அதிருப்தியில் இருக்கிறார்கள். அவர்கள் எங்களிடம் வந்தால் கண்டிப்பாக சேர்த்துக்கொள்வோம். அடுத்ததாக கொங்கு மண்டலத்தில் மாநாடு நடத்த இருக்கிறோம்‌ என தெரிவித்தார்.