வடகொரிய மற்றும் தென் கொரியாவுக்கு என பொதுவாக பௌத்த மதம் இருந்தாலும், வடகொரியா எந்த மதத்தையும் ஊக்குவிப்பதில்லை.

அந்நாட்டு அரசு ஒரு மதச்சார்பற்ற நாடாக இருக்கிறது. அதேபோல மக்களும் 64 சதவிகிதத்திற்கும் அதிகமானவர்கள் எந்த மதத்தையும் பின்பற்றுவதில்லை.

மக்கள் இப்படி இருந்தாலும், அரசும் சில கடுமையான கட்டுப்பாடுகளை விதித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வடகொரியா-தென் கெரியா நாடுகளிடையேயான விவகாரங்களை கையாளும் தென் கொரியாவின் அமைச்சகம்தான் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது. கடந்த 2017ம் ஆண்டிலிருந்து 2020ம் ஆண்டுவரை வடகொரியாவிலிருந்து தப்பி வந்த 500க்கும் மேற்பட்டவர்களிடம் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த தகவல்களை தென் கொரியா வெளியிட்டுள்ளது.

அதாவது, போதை பொருட்கள், தென் கொரியாவை சேர்ந்த வீடியோக்கள் மற்றும் மூட நம்பிக்கைகளை பரப்பினால் அந்நாட்டு அரசு மரண தண்டனை விதிப்பதாக இவர்கள் கூறியுள்ளனர்.

ஏற்கெனவே தென் கொரியாவுக்கும் - வட கொரியாவுக்கும் இடையே மோதல் போக்குகள் இருப்பதால் தென் கொரியாவின் அறிக்கையை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாது என சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர்.

இந்த அறிக்கை தொடர்பாக கருத்து தெரிவித்திருந்த தென் கொரிய அதிபர் யூன் சுக் இயோல், 'வடகொரியா ஒரு கொடூரமான நாடு. அங்கு பல மனித உரிமை மீறல்கள் நடக்கின்றன. ஆனால் வெளி உலகத்திற்கு அது சரியாக தெரியாது. இந்த அறிக்கைதான் உலகம் முழுவதும் தென் கொரியாவின் அட்டூழியங்களை வெளிச்சமிட்டு காட்ட வேண்டும். உலக நாடுகள் வட கொரியா மீது பொருளாதார தடைகளை விதிக்க வேண்டும். வட கொரியா ஒரு பைசா கூட நிதியுதவி பெற தகுதியற்ற நாடு. இவ்வளவு பிரச்னைகளுக்கு மத்தியிலும் வடகொரியா அணு ஆயுத சோதனைகளை நடத்தி வருகிறது. வட கொரியாவால் உலக நாடுகளுக்கு அச்சுறுத்தல்தான்' என்று கூறியுள்ளார்.