இந்தியா: தமிழ்நாடு

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கான திகதி கடந்த வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டு, நேற்று முன்தினம் எடப்பாடி பழனிசாமி மனுத் தாக்கல் செய்துள்ளார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகர், வைத்திலிங்கம் ஆகிய மூன்று பேரும் தனித்தனியாக அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும் என வழக்குகளைப் பதிவு செய்தனர்.

இதனையடுத்து இந்த வழக்கு நேற்றைய தினம் அவசர வழக்காக விசாரிக்கப்பட்டது.

ஓபிஎஸ், ஈபிஎஸ் இரு தரப்பிலும் பரபரப்பாக வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

இதையடுத்து நீதிபதி குமரேஷ் பாபு, 'அதிமுக பொதுச்செயலாளர் தொடர்பான வழக்கு மற்றும் பொதுக்குழு தொடர்பான வழக்கை வரும் 22ம் திகதி விசாரிக்கிறேன். 24ஆம் திகதி தீர்ப்பு வழங்குகிறேன். அதுவரை தேர்தல் நடைமுறையான வேட்பு மனுத் தாக்கல், பரிசீலனை உள்ளிட்டவற்றை தொடரலாம். ஆனால், முடிவுகளை வெளியிடக்கூடாது' என்று உத்தரவிட்டார்.

அதாவது 4 நாட்களுக்கு முடிவை அறிவிக்க முடியாது, அவ்வளவுதான். எனினும், இதனை ஓபிஎஸ் தரப்பினர் கொண்டாடி வருகின்றனர். இந்த உத்தரவையடுத்து, 'இது எங்களுக்கு கிடைத்த வெற்றி' எனக் கூறி ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் வெடி வெடித்து கொண்டாடி வருகின்றனர்.

உயர் நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ஓபிஎஸ் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி, அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கான முடிவை, தள்ளிப் போட்டதே எங்களுக்கு கிடைத்த வெற்றிதான். நீதி, நேர்மை எங்கள் பக்கம் இருக்கிறது; பொதுச்செயலாளர் என்று அறிவித்தால் பழனிசாமி ஜெயிலுக்குதான் செல்ல வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.