இந்தியா: தமிழ்நாடு

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான ஈக்வடாரில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 6.8 ஆகப் பதிவான இந்த நிலநடுக்கத்தால் மோசமான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.

ஈக்வடாரை உலுக்கிய இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் குறைந்தது 12 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், சிலர் காயமடைந்தார். இந்த நிலநடுக்கம் காரணமாக அங்குள்ள பல கட்டிடங்கள் சேதமடைந்தன என்று ஈக்வடார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈக்வடாரில் உள்ள மச்சலா மற்றும் குயென்கா போன்ற நகரங்களில் இந்த நிலநடுக்கம் காரணமாகச் சேதம் அதிகமாக உள்ளது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு மீட்புப் படையினர் விரைந்துள்ளனர்.

உள்ளூர் நேரப்படி 12.12 மணிக்கு 66 கிலோமீட்டர்கள் ஆழத்தில் பெருவின் எல்லைக்கு அருகில் உள்ள ஈக்வடார் பாலாவோவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

திடீரென ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் காரணமாகப் பொதுமக்கள் அஞ்சிய நிலையில், அனைவரும் கட்டிடங்களில் இருந்து வெளியேறி சாலைகளில் முகாமிட்டுள்ளனர்.

இந்த நிலநடுக்கம் காரணமாகச் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. நிலநடுக்கத்தின் தீவிரம் குறைவாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை என்று வலியுறுத்தியுள்ள ஈக்வடார் அதிபர் கில்லர்மோ லாஸ்ஸோ, சேதம் ஏற்படுவது குறித்து தகவல்களைப் பொதுமக்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் மூலம் மட்டுமே தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் பரவும் போலி செய்திகளை நம்ப வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.