இந்தியா: தமிழ்நாடு

தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் நாச்சியார் வயோதிகம் காரணமாக கடந்த மாதம் 25ஆம் திகதி உயிரிழந்தார். அவரது மறைவிற்கு அரசியல் கட்சித்தலைவர்கள் பலரும் இரங்கல் கூறினர்.

ஓ பன்னீர் செல்வம் தாயார் மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்தார். அவரது ட்விட்டர் பதிவில், "முன்னாள் முதலமைச்சர் அண்ணன் ஓ பன்னீர் செல்வம் அவர்களின் தாயார் பழனியம்மாள் அவர்கள் உடல்நலக்குறைவின் காரணமாக மறைவெய்தினார் என்றறிந்து மிகவும் வேதனையடைகிறேன். ஆளாக்கிய அன்னையை இழந்து தவிக்கும் திரு. பன்னீர்செல்வம் அவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று பதிவிட்டிருந்தார்.

திமுகவினர் பலர் அன்றைய தினமே ஓ.பன்னீர் செல்வம் வீட்டிற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

எதிரி கட்சியினராக கருதப்பட்ட திமுகவினர் உட்பட பலரும் நேரில் வந்து ஆறுதல் கூறிய நிலையில் அண்ணன் தம்பிகளாக பழகிய முன்னாள் அமைச்சர்கள் யாரும் எட்டிக்கூட பார்க்கவில்லை என்பதுதான் ஓ.பன்னீர் செல்வத்திற்கு அதிக சோகத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பசுமை வழிச்சாலையில் உள்ள ஓ.பன்னீர் செல்வம் வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார்.

மழை பெய்து கொண்டிருந்த நேரத்திலும் முதல்வர் ஸ்டாலின் தனது வீட்டிற்கு நேரில் வந்தது கண்டு ஓ.பன்னீர் செல்வம் நெகிழ்ச்சியடைந்தார்.