இந்தியா: தமிழ்நாடு

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றதை தொடர்ந்து காங்கிரஸ் மேலிடத் தலைவர்களை சந்தித்து வாழ்த்து பெறுவதற்காக டெல்லி சென்றிருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் நேற்று மாலை தான் விமானம் மூலம் சென்னை திரும்பியிருக்கிறார்.

பயணத்தின் காரணமாக மிகவும் அசௌகரியமாக இருந்த இவருக்கு நேற்றிரவு மூச்சுத்திணறலும், நெஞ்சு வலியும் ஏற்பட்டிருக்கிறது.

இதையடுத்து சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

அதற்குள் இளங்கோவனுக்கு மாரடைப்பு என தகவல் பரவ பரபரப்பு பற்றிக்கொண்டது.

இதனிடையே மருத்துவர்கள் நடத்திய பரிசோதனையில் நுரையீரலில் லேசான தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. அதனால் மூச்சுத்திணறல் ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறி அதற்கேற்ப சிகிச்சை வழங்கப்பட்டது. இன்று காலை மூச்சு விடுவதில் இளங்கோவனுக்கு எந்த சிரமும் ஏற்படவில்லை. அதேபோல் ஆக்சிஜன் அளவும் சீராக உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

இதையடுத்து ஐ.சி.யூ.விலிருந்து நார்மல் வார்டுக்கு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மாற்றப்பட்டுள்ளார்.

மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்து வரும் இவர், ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதனிடையே இளங்கோவனின் உடல்நிலை குறித்த அறிக்கையை உடனடியாக சுகாதாரத்துறை அதிகாரிகள் ராமச்சந்திரா மருத்துவமனையிலிருந்து கேட்டுப் பெற்றுள்ளனர். தற்போதைய நிலவரப்படி இளங்கோவன் நன்றாக இருக்கிறார்.