தமிழ் திரைப்படங்களில் பல நகைச்சுவை காட்சிகளில் தோன்றி மக்களை சிரிக்க வைத்த ரங்கம்மாள் பாட்டி காலமானார்.

எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளியான 'விவசாயி' படத்தில் அறிமுகமானவர் ரங்கம்மாள்.

தொடர்ந்து பல மொழிகளில் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை வேடங்களில் 500-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

தமிழில் முன்னணி நடிகர்களாக திகழும் ரஜினி, அஜித், விஜய் ஆகியோரின் படங்களிலும் வடிவேலுவின் காமெடி காட்சிகளில் நடித்தும் பிரபலமானார்.

சென்னையில் வாடகை வீட்டில் வசித்துவந்த இவர் பட வாய்ப்பு கிடைக்காமல் வறுமையில் வாடி வந்தார்.

தான் சம்பாதித்த பணத்தை பிள்ளைகளுக்கே செலவழித்து விட்டு படவாய்ப்புகளும் கிடைக்காமல் சிரமத்தில் வாழ்க்கையை நடத்தி வந்தார்.

பிள்ளைகளும் கைவிட்ட நிலையில் சாப்பாட்டுக்கே வழியில்லை.

இதனால் கடற்கரையில் கர்சீப் மற்றும் கைவினை பொருட்களை விற்பனை செய்து வந்ததுடன் தெரு ஓரங்களில் படுத்துறங்கி உள்ளார்.

மக்களை சிரிக்க வைத்த ஒரு பாட்டிக்கா இப்படி ஒரு நிலைமை என்று கண்கலங்க வைக்கும் அளவிற்கு வறுமையுடன் போராடி உள்ளார்.

பின்னர் தனது சொந்த ஊரான கோவை மாவட்டம், அன்னூர் அருகே உள்ள தெலுங்குபாளையத்தில் குடியேறினார்.

சமீபத்தில் ரங்கம்மாள் பாட்டியின் மகன் ராஜகோபால் "எனது தாய்க்கும் சினிமா உலகில் இதுபோன்று வறுமையில் வாடும் சக நடிகர்களுக்கும் நடிகர் சங்கம் உதவ முன்வர வேண்டும்" என கூறி இருந்தார்.  

இந்நிலையில் 85 வயதான ரங்கம்மாள் நேற்று முன்தினம் (29) உடல் நலக்குறைவால் காலமானார்.

இவரது மறைவுக்கு திரைபிரபலங்கள் பலரும் ரசிகர்களும் தங்களது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர்.