ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கல் உட்பட ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களை அமெரிக்கா உளவுபார்த்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ள நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு பங்கு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடுகளில் ஒன்றான டென்மார்க், தகவல் தொடர்பு வசதிக்காக பல்வேறு நாடுகளில் கடலுக்கு அடியில் ‘இன்டர்நெட் கேபிள்'களை பதித்து பயன்படுத்தி வருகிறது. இதன் வழியே சுவீடன், நார்வே, ஜெர்மனி, நெதர்லாந்து மற்றும் இங்கிலாந்து போன்ற பல நாடுகள் தகவல் பரிமாற்றத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த நிலையில் 2012 முதல் 2014 வரை டென்மார்க் ‘இன்டர்நெட் கேபிள்' வாயிலாக ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கல் உள்பட ஐரோப்பிய நாட்டு தலைவர்களை அமெரிக்கா உளவு பார்த்ததாக டென்மார்க்கின் அரசு ஊடகமான டி.ஆர். இந்த அதிர்ச்சிகர தகவலை வெளியிட்டுள்ளது.

டென்மார்க் ‘இன்டர்நெட் கேபிள்'களில் இருந்து குறுஞ்செய்திகள், தொலைபேசி அழைப்புகள் மற்றும் இணையதளத்தில் அதிகம் தேடப்பட்டவை மற்றும் பிற செய்தி பகிர்வு என எல்லாவற்றையும் இடைமறித்து விரிவான தரவுகளை அமெரிக்கா பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் ஐரோப்பிய நாடுகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அமெரிக்காவின் தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் துணை ஜனாதிபதியாக இருந்தபோது இந்த உளவு நடவடிக்கை நடந்திருப்பதால் அதில் நிச்சயம் அவரது பங்கு இருக்கும் என அமெரிக்காவின் மூத்த பத்திரிகையாளரும், தேசிய பாதுகாப்பு முகமையின் முன்னாள் ஊழியருமான எட்வர்ட் ஸ்னோடென் பகிரங்க குற்றம் சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.