இந்தியா: தமிழ்நாடு

திமுக தலைமை அலுவலகமான சென்னை அறிவாலயத்தில் இன்று அக்கட்சியின் தேர்தல் அறிக்கை மற்றும் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு தலைவரான திமுக எம்பி கனிமொழி, 64 பக்கங்களை கொண்ட தேர்தல் அறிக்கையை முதல்வர் ஸ்டாலினிடம் வழங்கினார். அதனை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.

தொடர்ந்து பேசிய முதல்வர் ஸ்டாலின், திமுகவின் தேர்தல் அறிக்கை தமிழ்நாட்டு மக்களின் தேர்தல் அறிக்கையாக உள்ளது என்றார். மேலும் பாஜக கொடுத்த வாக்குறுதிகளை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு நிறைவேற்றவில்லை என்று குற்றம்சாட்டிய முதல்வர் ஸ்டாலின், இனியும் மத்தியில் பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சி தொடர்வது நாட்டுக்கு நல்லது இல்லை என்றும் பாஜக அரசு தொடருவது ஆபத்து என்றும் கூறினார்.

பாஜகவின் ஆட்சியில் நாட்டின் கட்டமைப்புகள் சீரழிக்கப்பட்டுவிட்டதாகவும் தெரிவித்தார். நாட்டை அனைத்து வழிகளிலும் பாஜக பாழ்படுத்தி விட்டதாகவும் குற்றம்சாட்டினார். மத்தியில் மாநிலங்களை அனுசரித்து செல்லும் அரசு சமத்துவம் மற்றும் சமதர்மம் கொண்ட ஆட்சி அமைய வேண்டும் என்றும்இந்திய அரசியல் சாசன அமைப்பு சட்டத்தை காக்கும் அரசு மத்தியில் அமைய வேண்டும் என்றும் தெரிவித்தார்.