பாகிஸ்தானில் கடந்த பெப்ரவரி 8ஆம் திகதியன்று தேர்தல் நடைபெற்ற நிலையில், பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் நேற்று தேர்தல் முடிவுகளை வெளியிட்டுள்ளது.

இணையதொடர்பு தட்டுப்பாடு காரணமாக சுமார் 60 மணி நேரம் கடந்து தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மேலும் வாக்கு எண்ணிக்கையில் பெரும் முறைகேடுகள் நடந்துள்ளதாக அந்நாட்டு மக்கள் பரவலாக குற்றம் சாட்டி வருகின்றனர்.

இதன்படி, முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரிக் - இன்சாஃப் கட்சியை சேர்ந்தவர்கள், முடிவு அறிவிக்கப்பட்ட 264 இடங்களில் 101 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர்.

இம்ரான் கான் கட்சியை சேர்ந்த பலர் சுயேட்சை வேட்பாளர்களாக களம் இறங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இம்ரான் கானின் கட்சியான பிடிஐ  தங்களுக்கு கிடைத்திருக்கும் புகழும் வெற்றியும் வெறும் சமூக ஊடக பிம்பத்தால் வந்ததல்ல, உண்மையான மற்றும் அர்ப்பணிப்புள்ள ஆதரவாளர்களைக் கொண்டுள்ளதால் கிடைத்துள்ளது என்பதை நிரூபித்துள்ளது. பிடிஐ கட்சி அரசு அமைப்பதற்கு தேவையான பெரும்பான்மைக்கு குறைவாக 32 இடங்களை பெற்றுள்ளது.

இதேவேளை, முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃபின் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சி 73 இடங்களில் மாத்திரம் வெற்றி பெற்றுள்ளது. எனினும், முன்னாள் பிரதமரான நவாஸ் ஷெரிஃப் தாங்கள் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளதாகக் கூறியுள்ளார்.

தனது கட்சி மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளதாகக் கூறி, மற்றவர்கள் தனது கூட்டணியில் இணையுமாறு அவர் அழைப்பு விடுத்துள்ளார். அத்துடன், பிலாவல் பூட்டோ ஜர்தாரியின் பாகிஸ்தான் மக்கள் கட்சி வேட்பாளர்கள் 54 இடங்களில் வென்றுள்ளனர்.

இந்நிலையில் இம்ரான் கான் ஜனாதிபதியாவதை தடுக்கும் முயற்சியாக நவாஸ் ஷெரீப் மற்றும் பூட்டோ இருவரும் கூட்டணி ஆட்சி அமைக்க பேச்சு வார்த்தையை தொடங்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.