இயக்குநர் அருண்ராஜா காமராஜ் கனா படம் மூலம் தன்னுடைய இயக்குநர் கனவை நிறைவேற்றிக் கொண்டவர். இந்தப் படத்தை தொடர்ந்து உதயநிதி லீட் கேரக்டரில் நடித்திருந்த நெஞ்சுக்கு நீதி படத்தை இயக்கியிருந்தார் அருண்ராஜா காமராஜ். இந்தப் படமும் இவரது இயக்குநருக்கான அங்கீகாரத்தை உயர்த்திய நிலையில் லேபிள் என்ற வெப் தொடரை இயக்கியுள்ளார்.

இந்த தொடரில் ஜெய், தன்யா ஹோப், மகேந்திரன் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்திருந்தனர். வட சென்னை மக்களின் வாழ்வியலை கதைக்களமாக கொண்டிருந்த இந்த தொடரும் அருண் ராஜா காமராஜிற்கு மிகச்சிறந்த வரவேற்பை பெற்றுத் தந்துள்ளது.

மேலும் படம் வரவேற்பிற்கு இணையான விமர்சனங்களையும் பெற்றிருந்தது. இந்நிலையில் அவரது அடுத்தப்படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அடுத்ததாக நயன்தாராவை லீட் கேரக்டரில் வைத்து பிரின்ஸ் -பிரின்சஸ் என்ற படத்தை அருண்ராஜா காமராஜ் இயக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

முன்னதாக இந்தப் படம் பேச்சளவில் மட்டுமே இருந்தது. நயன்தாராவின் சமீபத்திய படங்கள் எதுவும் பெரிய அளவில் வெற்றிபெறாத நிலையில், இந்தப் படத்தை தயாரிப்பது குறித்து தயக்கத்துடன் தயாரிப்புத் தரப்பு இருந்த நிலையில், தற்போது லேபிள் படம் கொடுத்துள்ள தைரியத்தை அடுத்து இந்தப் படம் தற்போது மீண்டும் கையில் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.