பிரபல இசையமைப்பாளரும், இயக்குநருமான கங்கை அமரனின் மகன் பிரேம்ஜி, சிம்பு இயக்கி, நடித்த வல்லவன் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகம் ஆனார்.

மற்ற இயக்குநர்களின் படங்களில் நடித்ததை விட, தனது சகோதரனான வெங்கட் பிரபுவின் சரோஜா, கோவா, மங்காத்தா, பிரியாணி, மாசு என்கிற மாசிலாமணி படங்கள் பிரேம்ஜிக்கு அதிக பெயரை பெற்றுத்தந்தது. தற்போது வெங்கட்பிரபு இயக்கம் தளபதி 68 படத்திலும் பிரேம்ஜி ஒரு முக்கியமான ரோலில் நடித்து வருகிறார்.

44 வயதாகும் பிரேம்ஜி தற்போது வரை திருமணம் செய்து கொள்ளாமல் முரட்டு சிங்கிளாகவே இருக்கிறார். கடந்த ஆண்டு, பிரேம்ஜிக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக கங்கை அமரன் கூறியிருந்தார். ஆனால், பிரேம்ஜியோ இனி கல்யாணமே கிடையாது நான் எப்போதும் முரட்டு சிங்கிள் தான் என்று சோஷியல் மீடியாவில் பேசி வருகிறார்.

இந்நிலையில், பிரேம்ஜி புத்தாண்டு தினமான நேற்று தனது எக்ஸ் தள பக்கத்தில், "புத்தாண்டு வாழ்த்துக்கள், இந்த ஆண்டு நான் திருமணம் செய்து கொள்கிறேன். டாட்" என்று பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவினைப்பார்த்த ரசிகர்கள் இனி நீங்கள் முரட்டு சிங்கிள் மாரிமுத்து இல்ல என்றும் இந்த முடிவுக்கு வாழ்த்துக்கள் என்றும் கருத்துக்களை பகிர்ந்து கமெண்ட் பாக்ஸ்சை நிரப்பி வருகின்றனர். அண்மையில் பிரேம்ஜி பாடகி வினைத்தாவுடன் நெருக்கமாக இருக்கும் போட்டோ சோசியல் மீடியாவில் பரவியதால் இருவரும் காதலித்து வருவதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.