கடந்த சில வாரங்களுக்கு முன்பு திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் முன் எப்போதும் இல்லாத அளவுக்குக் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் நான்கு மாவட்டங்களில் பாதிப்புகள் மிக மோசமாக இருந்தது. தமிழ்நாடு அரசு சார்பில் அவர்களுக்கு நிவாரணம் அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நடிகர் விஜய் நலத்திட்ட உதவிகளை  இன்று வழங்கினார். இது தொடர்பான நிகழ்ச்சி நெல்லை கே.டி.சி நகரில் ஒரு அரங்கத்தில் நடைபெற்றது. அதில் கிட்டதட்ட 1500 குடும்பங்களுக்கு அரிசி, மளிகை பொருட்கள், ஒருவாரத்திற்கு தேவையான காய்கறிகள், வீடுகளை இழந்தவர்களுக்கு தலா ரூ.25000 விஜய் வழங்கி வைத்தார்.

மேலும் அரிசி, காய்கறி, மளிகைப் பொருட்கள் உள்ள தொகுப்புகளை விஜய் நேரடியாக அவரது கையால் வழங்கினார். அப்போது சிலர் மேடைக்கு வர முயன்ற நிலையில், அவர்களை மேடைக்கு வர வேண்டாம் நானே வருகிறேன் எனச் சொல்லி ஒவ்வொருவரிடமும் நேரடியாகச் சென்று நிவாரண பொருட்களை வழங்கினார்.

டிராலியில் நிவாரண பொருட்களை வழங்கிய அவர், அவர்கள் இருக்கும் இடத்திற்கே சென்று வழங்கினார். இந்தச் சம்பவம் அங்கிருந்தவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. ஏனென்றால் பொதுவாக மேடையில் நின்று கொண்டு மக்களை வரவழைத்துத் தான் நிவாரண பொருட்களைத் தருவார்கள். அப்படிச் செய்யாமல் விஜய் அவர்கள் இருக்கைக்கே சென்று நிவாரணத்தை வழங்கியதை அவரது ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில் தூத்துக்குடி மாநகர சேர்ந்த 500 பேர், மாற்றுத்திறனாளிகள், விதவைகள் என தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு விஜய் நிவாரண பொருட்களை வழங்கினார். இதற்கான நிவாரண பொருட்கள் சென்னையில் இருந்து வாகனத்தின் மூலம் நெல்லைக்கு கொண்டு சொல்லப்பட்டது.

மேலும், நலத்திட்ட உதவி வழங்கிய பின், 1500 குடும்பங்களுக்கு அங்கேயே சுட சுட தடபுடலான சாப்பாடு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.