நடிகர் அஜித் தற்போது விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

ஆக்ஷன் என்டர்டெயினர் ஜானரில் உருவாகிவரும் இந்தப் படத்தின் சூட்டிங் அசர்பைஜானில் கடந்த சில வாரங்களாக நடந்து வருகிறது. சமீபத்தில் சூட்டிங்கில் இருந்து அஜித், திரிஷா உள்ளிட்ட படக்குழுவினர் சிறிது இடைவேளை எடுத்துக் கொண்டு சென்னை திரும்பிய நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மீண்டும் அசர்பைஜான் புறப்பட்டு சென்றனர். படத்தின் சூட்டிங் வரும் பெப்ரவரி மாதம் வரையில் அசர்பைஜானில்தான் நடக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இந்தப் படத்தை தொடர்ந்து தன்னுடைய ஏகே43 படத்திற்காக ஆதிக் ரவிச்சந்திரனுடன் அவர் இணையவுள்ளார். இந்தப் படத்தின் முன் தயாரிப்பு பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்தப் படத்தை காமெடி படமாக எடுக்க ஆதிக் ரவிச்சந்திரன் திட்டமிட்டு அதற்கான கதைக்களத்தை உருவாக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகர் அஜித் ஆக்ஷன் ஜானர்களில் அதிகமாக நடித்து வரும்நிலையில் அவருக்கு காமெடி எப்படி செட் ஆகும் என்று கேள்விகள் எழுந்துள்ள நிலையில், வீரம் உள்ளிட்ட படங்களில் அஜித்தை சுற்றியுள்ளவர்கள் அதிகமாக காமெடி செய்வதாக காணப்பட்டது போல இந்தப் படமும் அமையுமா என்ற கேள்வியும் தற்போது உருவாகியுள்ளது.

எது எப்படியோ மார்க் ஆண்டனி என்ற வெற்றிப் படத்தை கொடுத்துள்ள ஆதிக், அஜித்திற்கும் சிறப்பான கதைக்களத்தை கொடுப்பார் என்று எதிர்பார்க்கலாம்.