லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய், த்ரிஷா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள லியோ படம் சர்வதேச அளவில் கடந்த 19ம் திகதி திரையரங்குகளில் வெளியான நிலையில், அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து வசூல் சாதனை படைத்து வருகிறது. கடந்த 4 நாட்களில் படத்தின் வசூல் 400 கோடி ரூபாயை தாண்டியுள்ளது. முதல் நாளிலேயே உலகளவில் 180 கோடி ரூபாய் கலெக்ஷனை தாண்டியுள்ளதாக தயாரிப்புத் தரப்பு அறிவித்திருந்தது.

இந்நிலையில் இந்தப் படத்தின் தயாரிப்பாளர் லலித்குமார் மற்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தொடர்ந்து படம் குறித்த பல்வேறு விடயங்களை பகிர்ந்து வருகின்றனர்.

கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் லியோ படம் வசூல் சாதனை படைத்து வருகிறது. இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், அதற்கு பதலளித்துள்ள லோகேஷ் கனகராஜ், இன்னும் நான்கைந்து நாட்கள், ரசிகர்களின் ரெஸ்பான்ஸ் மற்றும் விமர்சனங்களை தான் உற்று நோக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்த விமர்சனங்களை தான் தன்னுடைய அடுத்தப்படமான தலைவர் 171 படத்திற்கு எடுத்து சென்று, அந்தப் படத்தை மேலும் சிறப்பாக கொடுக்க முயற்சிப்பேன் என்றும் அவர் கூறியுள்ளார். தலைவர் 171 படம் அடுத்த ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் துவங்கவுள்ள நிலையில், அதற்கான முன் தயாரிப்பு பணிகளில் தற்போது லோகேஷ் கனகராஜ் ஈடுபட்டுள்ளார். லியோ படத்தை தொடர்ந்து அந்த வேலைகளில் ஈடுபடவுள்ளதாக முன்னதாக பேட்டியொன்றில் அவர் கூறியிருந்தார்.

முன்னதாக லியோ படத்தின் சூட்டிங்கில் பிசியாக இருந்ததால், ரஜினிகாந்திடம் முழுமையான ஸ்கிரிப்டை கூறவில்லை என்றும் முக்கியமான கதைக்களத்தை மட்டுமே தெரிவித்ததாக லோகேஷ் கூறியிருந்தார். அதை கேட்ட ரஜினிகாந்த் லோகேஷ் கனகராஜை கட்டிப்பிடித்து பாராட்டியதாகவும் மகிழ்ச்சி தெரிவித்திருந்தார். மேலும் இந்தப் படத்தை ரிலாக்சாக ஒரு வருட காலம் எடுத்துக் கொண்டு இயக்கவுள்ளதாகவும் லோகேஷ் கூறியுள்ளார்.