கிழக்கு ஆப்ரிக்க நாடான கென்யாவின் கடலோர பகுதியான மாலின்டி நகரில்  பாதிரியார் பால் மெக்கன்சி என்பவர் வசித்து வந்தார்.

அவருக்கு சொந்தமான, 800 ஏக்கர் பண்ணையில் ஏராளமானோர் உடல் மெலிந்து உயிரிழந்து கிடப்பதாக, அந்நாட்டு பொலிஸாருக்கு கடந்த மாதம் 26 ஆம் திகதி தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அப்பகுதியில் இருந்து 100க்கும் மேற்பட்டவர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.

பட்டினி கிடந்தால் இயேசுவை அடையலாம் என, பால் மெக்கன்சி கூறியதை பின்பற்றியதால், இவர்கள் உயிரிழந்தது தெரியவந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பலர் உயிரிழந்திருப்பதாக புகார் எழுந்ததை அடுத்து, பண்ணை முழுதும் தேடுதல் வேட்டை தொடர்ந்து நடந்தது. இதில், நேற்று மேலும் 22 உடல்கள் கண்டெடுக்கப்பட்டன எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதையடுத்து, பட்டினி வழிபாட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 201ஆக உயர்ந்துள்ளது. பெரும்பாலான சடலங்கள் பட்டினியால் உடல் மெலிந்து, உருக்குலைந்து காணப்பட்டன எனக் கூறப்படுகிறது.

மீட்கப்பட்ட சடலங்கள் அனைத்தும் கென்யாவின் கடலோரப்பகுதியில் அமைந்துள்ள தேவாலயத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசித்தவர்கள் என தெரியவந்துள்ளது.

இதற்கிடையே, ஏற்கனவே கண்டெடுக்கப்பட்ட உடல்களில் நடத்தப்பட்ட உடற்கூறு ஆய்வுகளில், பட்டினி, மூச்சுத் திணறல் மற்றும் பொருட்களால் தாக்கியதால் ஏற்பட்ட காயங்கள் போன்ற காரணங்களால் இறந்தது தெரிய வந்துள்ளது.

பல சடலங்களில் உள்ளுறுப்புகள் மாயமாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

வழிபாட்டில் ஈடுபட்ட 600க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதால், இது தொடர்பான விசாரணை தீவிரப்படுத்தப் பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில், போதகர் மெக்கன்சி உட்பட 26 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது மனைவி உட்பட 16 பேர் தற்போது நீதிமன்ற விசாரணையை சந்தித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.