இந்தியா: தமிழ்நாடு

தமிழ்நாடு முன்னாள் முதல்வரும் முன்னாள் திமுக தலைவருமான கருணாநிதி அவர்களுக்கு சென்னை மெரினா கடலில் பேனா சின்னம் அமைக்க திமுக அரசு முடிவு செய்துள்ளது.

சென்னை மெரினா அண்ணா நினைவிட வளாகத்தில் 2.23 ஏக்கரில் கருணாநிதி நினைவிடம் கட்டப்பட உள்ளது. அதனுடன் இணைந்ததாக சென்னை மெரினாவில் பேனா நினைவு சின்னம் அமைக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் இந்த நடவடிக்கை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதனிடையே அண்மையில் மத்திய அரசு 15 நிபந்தனைகள் விதித்து சென்னை மெரினா கடலில் பேனா நினைவு சின்னம் அமைக்க ஒப்புதல் அளித்தது.

இந்நிலையில் கருணாநிதி பேனா நினைவு சின்னத்தை சென்னை மெரினா கடலில் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் அதிமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இந்த வழக்கை உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்துள்ளார். ஏற்கனவே மீனவர்கள் சங்கமும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.