ஜப்பானின் ஆய்ச்சி மாகாணத்தில் உள்ள ஒரு கோழிப்பண்ணையில் வழக்கத்துக்கு மாறாக அதிக எண்ணிக்கையில் கோழிகள் இறந்தன.

இதை தொடர்ந்து இறந்துபோன கோழிகளை பரிசோதித்ததில் அவற்றில் பெரும்பாலானவை பறவை காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறந்தது தெரியவந்தது.

இது அங்கு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆய்ச்சி மாகாணத்தில் 11 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது பறவை காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் கூறுகின்றனர்.

பறவை காய்ச்சல் மேலும் பரவுவதை தடுக்கும் விதமாக மாகாணம் முழுவதிலும் சுமார் 3 லட்சத்து 10 ஆயிரம் கோழிகளை அழிக்க அதிகாரிகள் முடிவு செய்து அதற்கான பணிகளை தொடங்கியுள்ளனர்.

இதே போல் கோஹிமா மாகாணத்திலும் பறவை காய்ச்சல் காரணமாக 34 ஆயிரம் கோழிகள் அழிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஜப்பானில் கடந்த அக்டோபர் மாத இறுதியில் இருந்து பறவை காய்ச்சல் பரவி வருவதும் இதுவரை 33 லட்சம் கோழிகள் அழிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.