அமெரிக்காவின் பணவீக்கம் கணிசமாகக் குறைந்தாலும் வட்டி விகித உயர்வின் தாக்கமும், ரெசிஷன் அச்சமும் சற்றும் குறையாமல் உள்ளது.

இந்த நிலையில் அமெரிக்காவின் முன்னணி கார்ப்பரேட் நிறுவனங்கள் அனைத்தும் செலவுகளைக் குறைப்பதற்காக ஊழியர்களை அதிரடியாகப் பணிநீக்கம் செய்து வருகிறது.

அமெரிக்கா-வை தலைமையிடமாகக் கொண்ட உலகம் முழுவதிலும் வர்த்தகம் செய்யும் முன்னணி நிறுவனங்கள் அனைத்தும் ஆயிர கணக்கில் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளது.

இந்நிலையில் வால்ட் டிஸ்னி நிறுவனம் அதிகப்படியான ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது.

உலகின் முன்னணி ப்ரொடெக்ஷன் மற்றும் ஸ்ட்ரீமிங் சேவை நிறுவனமான வால்ட் டிஸ்னி தனது செலவுகளைக் குறைக்கவும், இருப்பு நிலை அறிக்கையை மேம்படுத்தவும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

டிஸ்னி குழுமத்தில் சுமார் 1,90,000 பேர் பணியாற்றி வரும் நிலையில், டிஸ்னி நிறுவனத்தின் சிஇஓ பாப் சபெக் மோசமான காலாண்டு முடிவுகளுக்குப் பின்பு புதிதாக ஊழியர்களை பணியில் சேர்ப்பதை நிறுத்தியும், ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யவும் முடிவு செய்துள்ளார்.

சமீபத்தில் வால்ட் டிஸ்னி சிஇஓ ஊழியர்களுக்கு அனுப்பிய மெமோவில் புதிய ஊழியர்கள் சேர்க்கையை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் முக்கியமான வர்த்தக விரிவாக்க பணியில் புதிய ஊழியர்களின் சேர்க்கை தொடரும் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் நிறுவனம் வாய்ப்பு கிடைக்கும் அனைத்து பிரிவுகளிலும் பணத்தைச் சேமிக்கும் பணிகளைத் தொடர உள்ளோம், இதில் சில ஊழியர்களை வெளியேற்றப்படலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

வால்ட் டிஸ்னி நிறுவனத்தின் மோசமான காலாண்டு முடிவுகள் எதிரொலியாகப் புதன்கிழமை வர்த்தகத்தில் 52 வார சரிவை இந்நிறுவனம் பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.

சில நாட்களுக்கு முன்பு டிவிட்டர் அறிவித்த மாபெரும் பணிநீக்கத்தைப் போலவே பேஸ்புக்-ன் தாய் நிறுவனமான மெட்டா 11000 ஊழியர்களைச் செலவுகளைக் குறைப்பதற்காகப் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.

இந்நிலையில் பொருளாதார மந்தநிலையைச் சமாளிக்க அமேசான் நிறுவனம் லாபம் அளிக்காத துறையின் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய தீர்மானித்துள்ளது.

இதன் படி அமேசான் கடந்த வாரம் புதிய ஊழியர்களைச் சேர்க்கும் பணியை நிறுத்தியமை குறிப்பிடத்தக்கது.