"கிளியோபாட்ரா" இந்த பெயரை கேட்டதும்..எகிப்து அரசி, சக்திவாய்ந்த பெண், கண்களால் அனைவரையும் கவரும் திறன் படைத்தவர், அழகால் ஒரு சாம்ரஜ்ஜியத்தையே அழித்த பேரரசி இப்படி பல விஷயங்கள் கண் முன் வந்து போகும்.

இந்நிலையில் எகிப்தை ஆண்ட மேசிடோனிய பேரரசின் கடைசி அரசியான கிளியோபாட்ராவின் வரலாறு மர்மமாகவே உள்ளது.

அதேபோல், கிளியோபாட்ரா கல்லறை இருக்கும் இடமும் இதுவரை தெரியாத மர்மமாகத் தான் உள்ளது.

எகிப்து நாகரிகம் என்பது மிகவும் பண்டைய கால நாகரிகம்.

இந்நிலையில்
நவீன உலகத்திற்கும் பண்டைய எகிப்து நாகரிகத்திற்கும் இடையே தொடர்பு குறித்து தொடர்ச்சியாகப் பல ஆண்டுகளாக ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில், பண்டைய எகிப்தின் தலைநகர் அலெக்ஸாண்ட்ரியாவுக்கு அருகே உள்ள தபோசிரிஸ் மேக்னா எனும் கோயிலுக்கு கீழே சுரங்கப்பாதை ஒன்றை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த சுரங்கப்பாதை புகழ்பெற்ற பேரழகி ராணி கிளியோபாட்ராவின் கல்லறைக்கு செல்லும் வழியாக இருக்கலாம் என தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

சுமார் 6 அடி உயரமுள்ள இந்த சுரங்கப்பாதை ஒரு மைலுக்கும் அதிகமான நீளத்தை கொண்டுள்ளதாக இது தொடர்பாக வெளியாகியுள்ள தகவல்கள் கூறுகின்றன. எந்த கருவிகளும் இல்லாமல் அந்த காலத்தில் கட்டப்பட்ட இந்த சுரங்கப்பாதையை ‘வடிவியல் அதிசயம்’ என தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

சுரங்கப்பாதையின் ஆரம்பகட்ட ஆய்வுகளின்படி, அதன் வடிவமைப்பு கிரேக்கத்தின் ஜூபிலினோஸ் சுரங்கப்பாதையைப் போலவே இருப்பதாக எகிப்து சுற்றுலா மற்றும் பழங்கால அமைச்சகம் தெரிவித்துள்ளது.

‘கிளியோபாட்ராவின் புதைக்கப்பட்ட வரலாற்றுக் கதைகள் உண்மையாக இருந்தால், இது 21 ஆம் நூற்றாண்டின் மிக முக்கியமான கண்டுபிடிப்பாக இருக்கும்.’ என்கிறார் சான் டொமிங்கோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கேத்லீன் மார்டினெஸின்.

எகிப்தின் கடைசி ராணி அங்கே அடக்கம் செய்யப்படுவதற்கு ஒரு சதவீதம் வாய்ப்பு இருந்தாலும், அதனைத் தேடுவது தனது கடமை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

“சுரங்கப்பாதையின் ஒரு பகுதி நீரில் மூழ்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மன்பாண்ட பாத்திரங்கள் சேற்றின் கீழ் காணப்பட்டன. இது நீருக்கடியில் புதைந்துள்ள தபோசிரிஸ் கோவிலுடனான அதன் தொடர்பை மேலும் பலப்படுத்துகிறது. தபோசிரிஸின் முந்தைய அகழ்வாராய்ச்சிகளில் கிளியோபாட்ரா மற்றும் அலெக்சாண்டர் ஆகியோரின் உருவங்கள் மற்றும் பெயர்கள் கொண்ட நாணயங்கள் மற்றும் ஐசிஸ் தெய்வத்தின் சிலைகள் கிடைத்துள்ளன.” என்று எகிப்து சுற்றுலா மற்றும் தொல்பொருட்கள் அமைச்சகம் தெரிவித்துள்ளது.