ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சிப் பொறுப்பு ஏற்ற பிறகு கடுமையான பொருளாதார நெருக்கடியால் ஆப்கான் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்‌.

இந்நிலையில் அந்நாட்டு விவசாயிகள் அதிக லாபம் தரும் ஓபியம் என்னும் போதைப் பொருள் விளைவிக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகிறார்கள்.

கடந்த 2021ஆம் ஆண்டு ஆட்சிப்பொறுப்பை தலிபான்கள் ஏற்றுக் கொண்ட பிறகு போதைப்பொருள் தயாரிப்பு மற்றும் பயன்பாடு இரண்டுக்கும் தடை விதிக்கப்பட்டது.

ஆனால் இந்த ஆண்டு 32 விழுக்காடு ஓபியம் சாகுபடி ஆப்கனில் அதிகரித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் போதைப்பொருள் குற்றத்தடுப்பு அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது.

ஆப்கானிஸ்தான் முழுவதும் சுமார் 2,23,000 ஹெக்டோ பரப்பளவில் ஓபியம் சாகுபடி செய்யப்பட்டிருப்பதாகவும், இதனால் சர்வதேச சமூகம் மிகப்பெரிய பாதிப்பை சந்திக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ள ஐக்கிய நாடுகள் சபை, சர்வதேச சமூகம் ஆப்கான் மக்களுக்கு உதவ முன்வந்து இது போன்ற சட்டவிரோத பேராபத்தை தடுக்கலாம் என அறைகூவல் விடுத்துள்ளது.

ஓபியம் பயிரிட தடை விதிக்கப்பட்டதற்குப் பிறகு ஏற்பட்ட தட்டுப்பாட்டால் அதன் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. இதனால் அதிக லாபத்திற்கு ஆசைப்பட்டு விவசாயிகள் ஓபியம் சாகுபடியில் இறங்கியுள்ளனர்.

ஆப்கானிஸ்தானின் தெற்கு பகுதியில் ஓபியம் சாகுபடி களைட்டியுள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு 3ஆயிரத்து 500 கோடியாக இருந்த ஓபியம் வர்த்தகம் இந்த ஆண்டு மூன்று மடங்கு அதிகரித்து 12 ஆயிரம் கோடிக்கு வர்த்தகம் ஆகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது ஒட்டுமொத்த நாட்டின் வேளாண் வருவாயில் 29 விழக்காடு என்ற அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது.

என்னதான் தேடுதல் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும், ஓபியம் விளைச்சலும், வர்த்தகமும் ஓய்ந்தபாடில்லை ஆப்கனில்.

கடுமையான பொருளதார மற்றும் அரசியல் நெருக்கடியால் ஆப்கானிஸ்தானில் அத்தியாவசிய மற்றும் உணவுப் பொருட்களின் விலை 35 விழுக்காடு அதிகரித்துள்ளது. இதனால் இது போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதன் ஆபத்தை ஆப்கன் மக்கள் பொருட்படுத்துவதில்லை.