உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க், சமூக வலைதளமான ட்விட்டர் நிறுவனத்தை விலைக்கு வாங்கி தன் வசப்படுத்தியுள்ளார்.

ட்விட்டர் தன் வசமானதும் அதில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வரப்போவதாகவும் எலான் மஸ்க் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

அந்த வகையில், ட்விட்டரின் அதிகாரப்பூர்வ கணக்கு என்பதற்கான ப்ளூ டிக்கிற்கு இனி கட்டணம் வசூல் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்த எலான் மஸ்க் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் “ட்விட்டரின் தற்போதைய ப்ளூ டிக் சரிபார்ப்பு முறை, நிலவுடைமை சமுதாயத்தில் பிரபுக்களின் கீழ் விவசாயிகள் இருப்பது போன்ற அமைப்பு. மக்களின் கையில் அதிகாரம்! மாதம் 8 டாலருக்கு ப்ளூ.” என எலான் மஸ்க் பதிவிட்டிருந்தார்.

மேலும், “ப்ளூ டிக் முறைக்கு இனி மாதம் 8 அமெரிக்க டாலர் கட்டணம் செலுத்த வேண்டும் இந்த கட்டணம் ஒவ்வொரு நாட்டுக்கும் ஏற்றவாறு மாறும். அவ்வாறு கட்டணம் செலுத்தி ப்ளூ டிக் பெறும் பயனர்களுக்கு பல்வேறு வசதிகளில் முன்னுரிமை அளிக்கப்படும். அதிக நேரங்கள் கொண்ட வீடியோ மற்றும் ஆடியோ பதிவிடும் வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் கிடைக்கும். இந்த கட்டணம் மூலம் கிடைக்கும் வருமானம், சிறந்த உள்ளடக்கத்தை உருவாக்குபவர்களுக்கு வெகுமதியாகவும் பகிர்ந்து அளிக்கப்படும்.” என்றும் எலான் மஸ்க் தெரிவித்திருந்தார்.

அவரது இந்த அறிவிப்புக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து புகார்களை பதிவிட்டு வருகின்றனர். ன

அவர்களுக்கு பதிலளிக்கும் வகையில், புகார் அளிப்பவர்கள் அனைவரும் புகாரைத் தொடர்ந்து அளிக்கலாம். ஆனால் அதற்கும் 8 டாலர் செலவாகும் என எலான் மஸ்க் அதிரடியாக தெரிவித்துள்ளார்.

இதன் மூலம், ப்ளூ டிக் முறைக்கு 8 அமெரிக்க டாலர்கள் வசூலிக்கும் முடிவில் இருந்து எலான் மஸ்க் பின்வாங்கப் போவதில்லை என்பது திட்டவட்டமாக தெரிகிறது.