வட அமெரிக்காவில் போதைப்பொருள் தொடர்பான மரணங்களுடன் தொடர்புடைய ஆபத்தான ஓபியாய்ட் வகையை சேர்ந்த Metonitazene என்ற போதைப்பொருள் நியூசிலாந்தில் முதன்முறையாக கண்டறியப்பட்டுள்ளது.

ஹை அலர்ட் என்ற அமைப்பு, இந்த போதைப்பொருள் மஞ்சள் நிற தூள் வடிவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

மேலும் இது நாடு முழுவதும் புழக்கத்தில் இருக்கலாம் எனவும், வலுவான மயக்கம் மற்றும் மனச்சோர்வை உருவாக்க இந்த போதைப்பொருள் விரைவாக செயல்படுகிறது என்று அது கூறுகிறது.

இத்தகைய கொடிய போதைப்பொருள் நியூசிலாந்தில் அடையாளம் காணப்பட்ட சம்பவம் கவலையை ஏற்படுத்துவதாக மருந்துகள் அறக்கட்டளையைச் சேர்ந்த சாரா ஹெல்ம் கூறினார்.

மேலும் "இது ஒரு சக்திவாய்ந்த ஓபியாய்ட் போதைப்பொருள், மற்றும் இது வெலிங்டன் பகுதியில் விற்கப்படுவதாக கூறப்படுகிறது" என ஹெல்ம் தெரிவித்தார்.

இதன் ஒரு சிறிய அளவு அளவுக்கதிகமான விளைவுகளை ஏற்படுத்தும் மற்றும் அது அமெரிக்காவில் பல இறப்புகளுக்கு காரணமாக இருந்த போதைப்பொருள் என்று அவர் தெரிவித்தார்.

மஞ்சள் நிற தூள் அல்லது மஞ்சள் மாத்திரைகள் எதையும் சாப்பிட வேண்டாம் என்று மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

"Fentanyl என்ற மருந்தை விட Metonitazene அதிக ஆற்றல் கொண்டது" என்று High Alert தனது இணையதளத்தில் தெரிவித்துள்ளது.

"இது மாத்திரைகள்/பொடிகளாக காணப்படுகின்றன. மற்றும் அவற்றை எடுத்துக்கொள்வது மரணம் உட்பட கடுமையான தீங்கு விளைவிக்கும்."

மருந்தை உட்கொள்பவர்கள் கடுமையான குமட்டல், வியர்வை, மெதுவாக சுவாசித்தல், குளிர் மற்றும் ஈரமான தோல் மற்றும் சுயநினைவு இழப்பு போன்றவற்றை அனுபவிக்கலாம் என்று ஹை அலர்ட் தெரிவித்துள்ளது.

யாராவது அவற்றை பயன்படுத்தி சுயநினைவை இழக்கத் தொடங்கினால் அல்லது மெதுவாக சுவாசிக்க ஆரம்பித்தால், உடனடியாக 111 ஐ அழைத்து தகவல் வழங்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.