இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு சவுதிஅரேபியாவிற்கு இரகசிய விஜயமொன்றை மேற்கொண்டு முடிக்குரிய இளவரசர் முகமட் பின் சல்மானை சந்தித்துள்ளார்.

 

அதன்படி ,இஸ்ரேலிய ஊடகங்கள் இதனை உறுதி செய்துள்ளன. இந்த இரகசிய சந்திப்பு குறித்து இஸ்ரேலிடமிருந்து உத்தியோகபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகாதபோதிலும் அந்த வெளிவிவகார அமைச்சு தன்னிடம் இதனை உறுதி செய்துள்ளது என இஸ்ரேலிய அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

 

இதற்கமைய சவுதிஅரேபியாவின் முடிக்குரிய இளவரசரை இஸ்ரேலிய பிரதமரும் இஸ்ரேலின் புலனாய்வு பிரிவான மொசாட்டின் யசிகோஹெனும் சந்தித்தனர் என இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

 

சவுதி அரேபியாவின் முடிக்குரிய இளவரசருடன் அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக்பொம்பியோ மேற்கொண்ட சந்திப்பிலேயே இஸ்ரேலிய பிரதமரும் மொசாட் தலைவரும் கலந்துகொண்டுள்ளனர்.

 

மேலும் ,இந்த சந்திப்பின்போது ஈரானுடனான உறவுகளை சீர்செய்வது குறித்து ஆராயப்பட்டதாகவும் எனினும் எந்த இணக்கப்பாடும் ஏற்படவில்லையென சவுதி அரேபிய அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

 

வரலாற்று பகையாளிகள் மத்தியிலான வரலாற்று முக்கியத்துவம்; வாய்ந்த சந்திப்பு சர்வதேச அரங்கில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

இஸ்ரேலும் சவுதிஅரேபியாவும் தங்களிடையேயான உறவுகளைசுமூகமாக்கவேண்டும் என அமெரிக்கா விரும்புவது குறிப்பிடத்தக்கது.

 

இஸ்ரேலிற்கும் ஐக்கிய அரபுஇராச்சியம் பஹ்ரான் சூடான் போன்ற நாடுகளிற்கும் இடையில் உறவுகள் மீண்டும் ஸ்தாபிக்கப்படுவதற்கு அமெரிக்கா உதவியுள்ளது.

 

சவுதி அரேபியா இதனை மிகவும் எச்சரிக்கையுடன் வரவேற்றுள்ளது.

 

அதேவேளை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு சவுதி அரேபியாவிற்கு இரகசிய விஜயமொன்றை மேற்கொண்டார் என வெளியான செய்திகளை சவுதி அரேபியா நிராகரித்துள்ளது.

 

இவ்வாறான சந்திப்பு எதுவும் நிகழவில்லை என சவுதி அரேபிய வெளிவிவகார அமைச்சர் இளவரசர் பைசல் அல் சவுட் டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார்.

 

அமெரிக்க சவுதி அரேபிய அதிகாரிகளிற்கு இடையிலான சந்திப்பே இடம்பெற்றது என சவுதி அரேபிய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.