திருகோணமலையிலிருந்து ஹொரவ்பொத்தானை நோக்கிப் பயணித்த கெப் வாகனமும், மொரவௌ பகுதியிலிருந்து திருகோணமலை நோக்கிச் சென்று கொண்டிருந்த முச்சக்கரவண்டியும் மோதியதினாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விபத்தில் உயிரிழந்த முச்சக்கரவண்டி சாரதி திருகோணமலை சங்கமம் பகுதியைச் சேர்ந்த துறைமுக அதிகார சபையில் கடமையாற்றி வந்த 60 வயதான அப்துல் ரஹீம் அப்துல் கலாம் என அடையாளம் காணப்பட்டுள்ளார்

இதனிடையே நாடளாவிய ரீதியில் நேற்று மாத்திரம் 90 வாகன விபத்துகள் இடம்பெற்றுள்ளதுடன், 9 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் இடம்பெற்ற விபத்துக்களில் சிக்கி 7 பேர் படுகாயமடைந்துள்ளதுடன் 50 பேர் சிறு காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.

இதேவேளை 21 விபத்து சம்பவங்களில் வாகனங்களுக்கு மாத்திரம் சேதம் ஏற்பட்டுள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் 20 ஆம் திகதி முதல் இதுவரையில் இடம்பெற்ற வாகன விபத்துகளில் சிக்கி 74 பேர் உயிரிழந்துள்ளதுடன் 149 பேர் படுகாயமடைந்துள்ளதுடன் 607 பேர் சிறிய அளவிலான காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

இந்த நிலையில் மது போதையில் வாகனம் செலுத்தியமைக்காக நேற்று மாத்திரம் 221 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட வாகனங்களை வழக்கு விசாரணைக்காக பொலிஸார் தடுத்து வைத்துள்ளனர்.

கடந்த 13 நாட்களுக்குள் மது போதையில் வாகனம் செலுத்தியதாக 2,045 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதே வேளை மோட்டார் வாகனங்கள் தொடர்பில் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட கண்காணிப்பு நடவடிக்கைகள் எதிர்வரும் செவ்வாய்கிழமை வரையிலும் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்றும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.