டெல்லியில் உள்ள இந்தியா கேட் பகுதியில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களுக்கு பிரம்மாண்ட சிலை அமைக்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

இந்திய விடுதலைக்காக போராடிய தலைவர்களில் முதன்மையானவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்.

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 1897 ஜனவரி 23 ஆம் திகதி பிறந்தார்.

இந்நிலையில் நாளை மறுநாள் நேதாஜியின் 125 ஆவது பிறந்தநாள் தினம் கொண்டாடப்பட உள்ளது.

இந்நிலையில், டெல்லி ராஜபாதையில் உள்ள இந்தியா கேட் பகுதியில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்-க்கு பிரம்மாண்ட சிலை அமைக்கப்படும் என்று பிரதமர் மோடி இன்று அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ஒட்டுமொத்த நாடும் நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் 125 ஆவது பிறந்தநாள் கொண்டாடப்பட உள்ள நிலையில் இந்தியா கேட் பகுதியில் நேதாஜிக்கு பிரம்மாண்டமான கிரைனெட் சிலை அமைக்கப்படும். இது நேதாஜிக்கு இந்தியா செலுத்தக்கூடிய நன்றிக்கடனாகும்.

நேதாஜிக்கு பிரம்மாண்ட கிரைனெட் சிலை அமைக்கும் பணி நிறைவடையும் வரை அந்த இடத்தில் நேதாஜியின் உருவம் மின் ஒளியில் திரையிடப்படும். அந்த மின் ஒளி வடிவிலான சிலையை நான் நேதாஜியின் 125-வது பிறந்தநாளான நாளை மறுதினம் திறந்துவைக்க உள்ளேன்’ என தெரிவித்துள்ளார்.