ஆன்லைன் விளம்பர ஏலத்தில் கூகுள், பேஸ்புக் ஆகிய பெருநிறுவனங்கள் சர்வாதிகாரம் செய்வது குறித்து அமெரிக்க நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.

சமூகவலைத்தள மற்றும் ஆன்லைன் நிறுவனங்களான பேஸ்புக் மற்றும் கூகுள் ஆகிய நிறுவனங்கள் மீது கடந்த சில ஆண்டுகளாகவே குற்றச்சாட்டு ஒன்று உள்ளது.

இந்த இரு நிறுவனங்களும் ஆன்லைன் விளம்பரதாரர்களின் ஏலத்தை மொத்தமாக எடுத்துக்கொண்டு விளம்பர உலகையே தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து ஆதிக்கம் செலுத்துவதாகவும் இதனால் சிறு ஆன்லைன் தொழில்நுட்ப நிறுவனங்கள் கடுமையாக பாதிப்படைவதாகவும் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக அமெரிக்காவின் நியூயார்க் நீதிமன்றத்தில் கூகுள் CEO சுந்தர் பிச்சை, ஃபேஸ்புக் நிர்வாக தலைவர் ஷெரில் சாண்ட் வேர்க் மற்றும் சிஇஓ மார்க் சக்கர்பெர்க் ஆகியோரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

கூகுளின் தாய் நிறுவனமான ஆல்ஃபபெட், பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா உள்ளிட்ட நிறுவனங்களின் செயல்பாடு குறித்து நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

கூகுள் மற்றும் பேஸ்புக் நிறுவனங்களில் தங்கள் விளம்பரங்களை விற்க விளம்பரதாரர்கள் பலர் முன்வருகின்றனர். அமெரிக்க சட்டதிட்டங்களுக்கு கட்டுப்பட்டே தங்கள் ஏலத்தை ஏற்றுக்கொள்கிறோம் என்று இவர்கள் தெரிவித்தனர்.

மேலும் நிறுவன ஒப்பந்தங்களை தாங்கள் கட்டாயமாக கடைப்பிடிப்பதாகவும் கூறினர். ஆனால் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அமெரிக்க அரசு, நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது.

அந்த மனுவில் சட்டவிரோதமாக இந்த இரு நிறுவனங்களும் விளம்பரதாரர்களை ஈர்த்து மறைமுகமாக சிறு நிறுவனங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக கூறியிருந்தது.

இதனை மெய்ப்பிக்கும் வகையில் சமீபத்தில் கூகுள் விளம்பரங்கள் மூலம் ஈட்டிய லாபத்தை அடுத்து அதன் பங்குகள் பங்குச் சந்தையில் அமேசான், பேஸ்புக் ஆகிய நிறுவனங்களுக்கு போட்டிபோடும் வகையில் அதிகளவு உயர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.