அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தில் உள்ள யூதவழிபாட்டுத்தலமொன்றில் பலரை பணயக்கைதிகளாக பிடித்துள்ள நபர்  ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படையினரை கொலை செய்ய திட்டமிட்டார் என்ற குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்ட பாக்கிஸ்தான் விஞ்ஞானியை  Aafia Siddiqui, விடுதலை செய்யவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கடந்த ஐந்து மணித்தியாலங்களிற்கு மேல் அந்த நபர் பலரை பணயக்கைதிகளாக பிடித்து வைத்துள்ளார் ஒருவரை விடுதலை செய்துள்ளார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆகக்குறைந்தது நான்கு பேர் உள்ளே சிக்குண்டுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபர் பணயக்கைதிகளாக பொதுமக்களை பிடித்துவைத்துள்ளமைக்கான சரியான காரணத்தை அறிவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் கைது செய்யப்பட்டவேளை அமெரிக்க படையினர் மீது தாக்குதலை மேற்கொண்டார் என்ற குற்றச்சாட்டின் கீழ் 2010 இல் 80 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பாக்கிஸ்தானின்  பெண் விஞ்ஞானி  விடுதலை செய்ய வேண்டும் என அந்த நபர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு பாக்கிஸ்தானில் கடும் எதிர்ப்பு எழுந்ததுடன் அமெரிக்க குற்றவியல் துறை அவரை பழிவாங்கிவிட்டது என கருத்துக்கள் வெளியாகியிருந்தன.

பொதுமக்களை பணயக்கைதிகளாக பிடித்துள்ள நபர் பெண்விஞ்ஞானியுடன் பேசவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நபர் யார் என்பதை இன்னமும் கண்டுபிடிக்கவில்லை ஆரம்ப கட்ட தகவல்களே வெளியாகின்றன என விசாரணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

எவ்பிஐயின் விசேட பிரிவினர் அந்த பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளனர் அவர்கள் அந்த நபருடன் தொடர்புகொண்டுள்ளனர் என தெரிவித்துள்ள அதிகாரியொருவர் அந்த நபரிடம் ஆயுங்கள் உள்ளதா என்பதையும் அவர் என்ன தெரிவித்தார் என்பதையும் தெரிவிக்க மறுத்துள்ளார்.

யூதவழிபாட்டுத்தலத்தின் ஆராதனைகள் நேரடியாக ஒளிபரப்பாகிக்கொண்டிருந்த வேளையே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.