அயர்லாந்து நாட்டில் இந்த ஆண்டு வேற்றுகிரகவாசிகளை பார்த்ததாக 8 விநோத வழக்குகள் பதிவாகி உள்ளன.

இரண்டாம் உலகப்போரில் முதன் முறையாக விமானங்கள் பயன்படுத்தப்பட்ட போது, வானில் சில விநோதமான பறக்கும் தட்டுகளை பார்த்ததாக போர் விமானிகள் பலர் கூறியிருக்கின்றனர். அதே போல் கேமரா கண்டுபிடிக்கப்பட்ட பிறகு, வானில் விசித்தரமான பறக்கும் தட்டுகளை படம்பிடித்ததாக பலர் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கின்றனர்.


பெரும்பாலும் இவ்வாறு கூறப்படும் சாட்சிகள் தவறானதாகவே இருக்கும் அல்லது வானில் பறக்கும் பலூன்கள், வால் நட்சத்திரங்கள், விமானங்கள் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றாக இருக்கும்.

இதுவரை வேற்றுகிரகவாசிகள் இருப்பதற்கான உறுதியான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை என்பதே உண்மை.

இந்நிலையில் அயர்லாந்து நாட்டில் இந்த ஆண்டு வேற்றுகிரகவாசிகளை பார்த்ததாக 8 விநோத வழக்குகள் பதிவாகி உள்ளன.  

ஜனவரி 17 அன்று டவுன்பேட்ரிக் பகுதியில் இருந்து வெளியான ஒரு செய்தி அறிக்கையில், ஒரு உள்ளூர் நபர் விண்கலம் மற்றும் வானத்தில் தோன்றிய ஒளிரும் விளக்குகள் பற்றி கூறினார்.

பின்னர் மே மாதம், மாகாபெரி பகுதியில் ஹெலிகாப்டர் காணப்பட்டதைத் தொடர்ந்து வெள்ளை ஒளி காணப்பட்டது என உள்ளூரில் 2 சாட்சிகள் பதிவாகி இருக்கின்றன. 

ஜூன் மாதத்திற்குப் பிறகு, உள்ளூரில் வசிக்கும் நபர் ஒருவர் தனது படுக்கையறையில் வேற்றுகிரகவாசிகள் இருப்பதாக காவல்துறைக்கு புகாரளித்தார்.

ஜூலை மாதம் நியூடவுன்பி பகுதியில் உள்ள ஒரு வீட்டின் சிசிடிவியில் ஒரு வித்தியாசமான உருவம் வருவது போன்ற காட்சிகள் பொலிஸாருக்கு கிடைத்தது. 

சென்டர்ஃபீல்ட் பகுதியில் டோம் வடிவிலான ஒரு பொருளை பொலிஸார் கண்டுபிடித்தனர். அதில் எட்டு இடங்களில் இருந்து வெளிச்சம் தோன்றுவதைக் காண முடிந்தது.

மேலும் அக்டோபரில், வேற்றுகிரகவாசிகளால் கடத்தப்பட்டதாகக் கூறிய ஒருவரை காவல்துறை கைது செய்தது.

இறுதியாக கடந்த மாதம் நவம்பரில், வானத்தில் ஒரு வித்தியாசமான பிரகாசமான ஒளி காணப்பட்டதாகவும், அதனால், தான் மிகவும் பீதி அடைந்ததாகவும் உள்ளூரில் வசிக்கும் நபர் ஒருவர் காவல்துறையிடம் கூறினார்.

வடக்கு அயர்லாந்தின் காவல்துறையைச் சேர்ந்த செய்தித் தொடர்பாளர், இந்த விவகாரத்தில் எந்த விசாரணையும் நடைபெறவில்லை என்று தெளிவுபடுத்தினார்.

கவனத்தை ஈர்ப்பதற்காகவும் இது போன்ற வழக்குகள் பதிவு செய்யப்படலாம் என அதிகாரிகள் கூறுகின்றனர். இருப்பினும் பறக்கும் தட்டுகள், வானத்தில் விசித்திரமான ஒளி, வேற்றுகிரகவாசிகள் பற்றி பதிவான வழக்குகள் குறித்த தகவல்களை அயர்லாந்து காவல்துறை பராமரித்து வருகிறது.