தமிழகத்தில் உள்ள கடற்கரைகளில் 31 ஆம் திகதி இரவு பொதுமக்கள் கூடி புத்தாண்டு கொண்டாட தடை விதிக்கப்படுவதாக டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.

புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது அநாகரீகமான செயல்களில் ஈடுபடுவோர் மற்றும் பைக் ரேசில் ஈடுபடுவோர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் எச்சரித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் கொரோனா நோய்த் நொற்றுப் பரவலை கட்டுப்படுத்தவும். தற்போது பரவி வரும் உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் பரவலை தடுக்கவும், தமிழக அரசு சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அமல்படுத்தி உள்ளது.

மேலும் பண்டிகை காலங்களில் கொரோனா தொற்றுப் பரவல் அதிகரிக்கக் கூடும் என்பதால் பொது மக்கள் வெளியில் ஒன்று கூடுவதை முற்றிலும் தவிர்க்கும்படி தமிழக அரசு அறியுறுத்தியுள்ளது.

வரும் 31 ஆம் திகதி இரவு தமிழ்நாட்டிலுள்ள கடற்கரைகளில் பொதுமக்கள் கூடி புத்தாண்டு கொண்டாட அனுமதி இல்லை.

எனவே அனைவரும் வீடுகளிலேயே அவரவர் குடும்பத்தினருடன் புத்தாண்டினை மகிழ்ச்சியுடன் மற்றவர்களுக்கு இடையூறு இல்லாத வகையில் கொண்டாடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வழிபாட்டு தளங்களில் தமிழக அரசினால் அறிவுறுத்தப்பட்ட கொரோனா நடத்தை வழிமுறைகளை பின்பற்றுமாறும், புத்தாண்டு தினத்தில் பொது இடங்களிலும், சாலை ஓரங்களிலும் கூட்டம் கூடுவதையும் இரு சக்கர வாகனங்களில் சுற்றுவதைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்படுகிறது.

மது அருந்திவிட்டு வாகனங்களை ஓட்ட கூடாது. 31 ஆம் திகதி இரவு, காவல்துறையினரின் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மது அருந்திய ஓட்டுநர்கள் கைது செய்யப்படுவர்.

மேலும் அதி வேகமாகவும், கவனக்குறைவாகவும் வாகனம் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும்.

விபத்தில்லா புத்தாண்டாக கொண்டாட தமிழக காவல்துறைக்கு ஒத்துழைப்பு நல்க கேட்டுக்கொள்கிறோம். அனைவருக்கும் தமிழ்நாடு காவல்துறையின் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.