பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு உயர்ரக பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட புதிய காருக்கு மாறியுள்ளார்.

தொழிலதிபர்கள், முக்கிய அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் போன்றோர் மிகவும் பாதுகாப்பான வாகனங்களையே பயன்படுத்த விரும்புவர். அந்த வகையில் தற்போது பிரதமர் நரேந்திர மோடி பல உயர்ரக பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட புதிய காருக்கு மாறியுள்ளார்.

பிரதமர் மோடி கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை டொயோட்டா லேண்ட் குரூஸ் காரை  பயன்படுத்தி வந்தார்.

இந்நிலையில் தற்போது அவர் ரூ.12 கோடி மதிப்பிலான புதிய மெர்சிடிஸ் மேபெக் எஸ் 650 காரை பயன்படுத்தி வருகிறார்.

இந்த வகை கார்கள் ஏகே 47 துப்பாக்கி தோட்டாக்களின் தாக்குதலை தாங்கும் சக்தியை கொண்டதாகும்.

மேலும், விபத்து ஏற்பட்டால் தானாக பெட்ரோல் டாங்க் மூடிக்கொள்ளும் வசதியும் இதில் உள்ளது. இதேபோல், விஷ வாயு தாக்குதல் ஏற்பட்டால் காரில் சுவாசிக்க ஏதுவாக செயற்கை சுவாசக் கருவியும் இதில் உள்ளது.

சமீபத்தில் நடந்த மோடி- புதின் சந்திப்பின் போது பிரதமர் மோடி இந்த காரில் சென்றதாக தகவல் வெளியானது.

குஜராத் முதல்வராக இருந்தபோது, ​​பிரதமர் மோடி மஹிந்திரா ஸ்கார்பியோவை பயன்படுத்தினார்.

மேலும் 2014 இல் பிரதமராகப் பதவியேற்ற பிறகு, அவர் பிஎம்டபிள்யூ  7 சீரிஸ் உயர் பாதுகாப்பு வாகனத்தை பயன்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.