வியர்வை துர்நாற்றத்தை போக்கும் பிரபல ‘Old spice’டியோடரன்ட்டில் புற்றுநோயை ஏற்படுத்தும் அபாயகரமான வேதிப்பொருள் இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இதனால், அதன் சில தயாரிப்புகளை திரும்ப பெறுவதாக பிராக்டர் அண்ட் கேம்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது.

பிரபல நிறுவனமான பிராக்டர் அண்ட் கேம்பிள் செய்தித் தொடர்பாளர் கூறியதாவது, எங்கள் நிறுவனத்தின் தயாரிப்பான ‘ஓல்ட் ஸ்பைஸ் டியோடரன்ட்’ வியர்வை துர்நாற்றத்தை போக்க பயன்படுகிறது.

இந்நிலையில் எங்கள் நிறுவனத்தில் சில குறிப்பிட்ட டியோடரன்டுகளில் புற்றுநோயை ஏற்படுத்தும் பென்சீன் என்ற வேதிப்பொருள் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து பென்சீன் கலந்து தயாரிக்கப்பட்டு 2023 செப்டம்பரில் காலாவதியாகும் நிலையில் விற்பனைக்கு அனுப்பிய பொருட்களை திரும்பப் பெற்றுக் கொள்ளத் துவங்கி விட்டோம்.

இதனால் எங்கள் மற்ற தயாரிப்புகளை பயன்படுத்துவதில் எந்த பயமும் தேவையில்லை.

எங்கள் நிறுவனத்துக்கு மேற்கண்ட பொருட்களை தயாரித்து வழங்கும் உற்பத்தியாளர் பாதுகாப்பான பொருட்களை தயாரிப்பதில் கவனம் செலுத்த துவங்கி விட்டார்.

எனவே வாடிக்கையாளர்கள் குறிப்பிட்ட காலத்தில் தயாரிக்கப்பட்ட பொருட்களை தவிர மற்றைய தயாரிப்புகளை எப்போதும் போல பயன்படுத்தலாம் என தெரிவித்துள்ளார்.