கடலூரில் என்கவுண்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட ரவுடியின் மனைவி வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் குப்பங்குளத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன்(வயது 30). இவருடைய மனைவி காந்திமதி(27).

கிருஷ்ணன், கடந்த பிப்ரவரி மாதம் 16ஆம் திகதி இரவு தனது கூட்டாளிகள் 9 பேருடன் சேர்ந்து, சுப்புராயலுநகர் பூந்தோட்ட சாலையை சேர்ந்த பிரபல ரவுடியான வீராங்கன் என்பவரை தலையை துண்டித்து கொலை செய்து விட்டு தப்பி ஓடினார்.

இதனை தொடர்ந்து புதுப்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் தீபன் தலைமையிலான போலீசார், கிருஷ்ணன் உள்ளிட்ட 5 பேரை மடக்கி பிடித்தனர்.

பின்னர் அவர்களை திருப்பாதிரிப்புலியூர் போலீசில் ஒப்படைத்து விட்டு, கிருஷ்ணனை மட்டும் மற்ற கொலையாளிகள் இருக்கும் இடத்தை அடையாளம் காட்டுவதற்காக அழைத்து சென்றனர். அப்போது கிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் தீபனை கழுத்தை அறுத்துவிட்டு தப்ப முயன்ற போது, என்கவுண்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

கடலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக கிருஷ்ணனின் கூட்டாளிகள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

இந்தநிலையில் கிருஷ்ணன் மனைவி காந்திமதி நேற்று இரவு 8.30 மணி அளவில் குப்பங்குளத்தில் உள்ள கடைக்கு சென்று விட்டு வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்மநபர்கள் 3 பேர், காந்திமதியை வழிமறித்து அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் கழுத்து உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வீரா கொலை வழக்கு தொடர்பாக அவரது கூட்டாளிகள் யாரேனும் காந்திமதியை வெட்டி கொன்றார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்ந்து குப்பங்குளம் பகுதியில் பதற்றம் நிலவுவதால் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்