சென்னை தலைமைச் செயலகத்தில் இயங்கிவரும் பல்வேறு அரசு துறைகள் சார்பில் மேற்கொள்ளப்படும் திட்டங்கள், அறிவிப்புகள், அரசாணைகள், உத்தரவுகள தமிழக அரசின் இணையதள பக்கத்தில் அந்தந்த துறையின் கீழ் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன.

பொதுத்துறை பிரிவில் முக்கிய பிரமுகர்கள் வருகை விவரங்கள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் விவரங்கள் போன்ற அரசின் முக்கிய விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ள கம்ப்யூட்டரில் ஹேக்கர்கள் நுழைந்து தகவல்களை திருடியதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் இந்த தகவல்களை மீண்டும் தர வேண்டும் என்றால் 1,690 அமெரிக்க டாலர்கள் (ரூ.1 லட்சத்து 45 ஆயிரம்) தர வேண்டும் என்று மிரட்டல் விடுப்பதாகவும் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

ஆனால் இந்த தகவலை அதிகாரிகள் யாரும் உறுதிப்படுத்தவில்லை. போலீஸ் உயரதிகாரிகளிடம் கேட்ட போது, ‘சம்பந்தப்பட்ட துறையிடம் இருந்து எந்தவித புகார்களும் வரவில்லை’ என்று கூறிவிட்டனர்.