வடகொரியா இரண்டு ஏவுகணை சோதனைகளை நடத்தியுள்ளதாக தென்கொரியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடகொரியா புதன்கிழமையன்று கிழக்கு கடற்பகுதியில் நீண்ட தூரம் சென்று தாக்க கூடிய இரண்டு ஏவுகணை சோதனைகளை நடத்தி உள்ளது.  சோதனையில் 800 கி.மீ. தூரத்தில் இருந்த இலக்கை ஏவுகணை துல்லியமாக தாக்கி அழித்தது.

ஒரே வாரத்தில் இரண்டு முறை ஏவுகணை சோதனைகளை நடத்தியுள்ளது. இந்த ஏவுகணை சோதனை குறித்து அமெரிக்காவும், தென்கொரியாவும் ஆய்வு செய்து வருகின்றன. வடகொரியா வார இறுதியில் புதிதாக உருவாக்கப்பட்ட குரூஸ் ஏவுகணையை பரிசோதித்ததாக கூறிய இரண்டு நாட்களுக்குப் பிறகு இந்த தகவலை தென் கொரியா வெளியிட்டு உள்ளது.

ஏவுகணை சோதனை நடத்தி அண்டை நாடுகளுக்குப் பதற்றத்தை ஏற்படுத்தி வரும் வடகொரியாவுக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் பலமுறை எச்சரிக்கை விடுத்துள்ளது. 

உலகம் முழுவதும் கொரோனாவால் பல்வேறு நாடுகள் பாதிப்புக்கு உள்ளாகும்போது வடகொரியாவில் மட்டும் கொரோனா தொற்று குறித்த எந்தத் தகவலும் வெளியிடப்படாமல் உள்ளது.

கொரோனா அச்சத்தால் வடகொரியா தொடர்ந்து எல்லைகளை மூடிவைத்துள்ளது. அணு ஆயுத சோதனைகளால் பல்வேறு நாடுகளிடமிருந்தும் பொருளாதாரத் தடைகளை எதிர்கொண்டுள்ளது வடகொரியா. பொருளாதாரத் தடைகள் காரணமாக வடகொரியா உணவுப் பஞ்சத்தையும் எதிர் கொண்டுள்ளது.