எபோலாவைப் போன்ற மிகவும் ஆபத்தான வைரஸ் பரவல் முதன்முறையாக மேற்கு ஆப்பிரிக்க நாடொன்றில் கண்டறியப்பட்டுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் கூறியுள்ளது.

"மார்பர்க்" என்ற குறித்த வைரஸ் தொற்று கினி குடியரசில் உள்ள ஒரு ஆண்ணொருவரிடம் கண்டறியப்பட்டுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் திங்களன்று உறுதிபடுத்தியுள்ளது.

நோய்க்கிருமி எபோலா வைரஸின் குடும்பத்தைச் சேர்ந்தது, ஆனால் அதற்குத் தடுப்பூசிகள் அல்லது சிகிச்சைகள் இதுவரை கண்டறியப்படவில்லை. மற்றும் வைரஸ் தொற்றுக்குள்ளானால் இறப்பு விகிதம் 88 சதவீதம் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் கினி குடியரசின் சுகாதாரப் பணியாளர்கள் இது தொடர்பான விரைவான விசாரணை நடவடிக்கையை தூண்டியுள்ளனர்.

உலக சுகாதார ஸ்தாபன ஆப்பிரிக்காவின் பணிப்பாளர் டாக்டர் மட்ஷிடிசோ மோயிட்டி, மர்பர்க் வைரஸ் பரவுவதற்கான சாத்தியக்கூறுகளை கண்டறிந்து, அவற்றை நாம் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

மார்பர்க், கொவிட்-19 போன்று விலங்குகளிடமிருந்து மனிதருக்கு பரவியுள்ளது.

வெளவால்களால் பரவியுள்ளதாக சந்தேகிக்கப்படும் இந்த வைரஸ் கடந்த ஆகஸ்ட் 2 ஆம் திகதி தெற்கு குக்கெடோ மாகாணத்தில் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்த நோயாளியிடமிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளில் கண்டறியப்பட்டது என்று உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு தொடங்கி 12 உயிர்களைக் கொன்ற கினியாவின் இரண்டாவது எபோலா வெடிப்பை முடிவுக்குக் கொண்டுவருவதாக உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்த இரண்டு மாதங்களுக்குப் பின்னர் இந்த கண்டுபிடிப்பு வெளியாகியுள்ளது.